Tuesday, January 28, 2014

நாலு கால் நல்லது


ஆம் ஆத்மி கட்சி.  கடந்த இரண்டு வருட காலங்களாக ஊழலுக்கு எதிராக தன்னார்வ இயக்கங்களும், சில தனி மனிதர்களும் முன்னெடுத்த போராட்டத்தின் உச்சகட்டமாக உருவான கட்சி, துவங்கிய ஒரு வருடத்துக்குள்ளாக தலைநகர் டில்லியில் ஆட்சி அமைத்துள்ளது.  ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், நிர்பயாவின் கொடூர கற்பழிப்பில் உச்சிக்குச் சென்றது. ஐக்கிய முன்னேற்ற கூட்டணி-2 அரசின் மீது சுமத்தப்பட்ட ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளும், அமைச்சர்கள் சிறைக்குச் சென்றதும் நாடெங்கிலும் ஊழல்தான் நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற உணர்வை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.  இந்த உணர்வு டில்லியில் ஆப் கட்சிக்கு பெருமளவு ஆதரவை பெற்றுத்தந்து இரண்டாவது பெரும் கட்சியாக உருவெடுக்க வைத்தது. நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில்  பாஜக மற்றும் காங்கிரஸுக்கு ஒரு நம்பிக்கையான மாற்றாக ஆப் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால் மாபெரும் வெற்றி கிடைத்தது.

ஒரு கட்சிக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு அளிப்பது என்பது இரண்டு காரணங்களால் என்று கூறுவார்கள்.  ஒன்று அந்தக் கட்சியின் மீது மக்களின் நம்பிக்கை, இரண்டு அதுவரை ஆட்சியிலிருந்த கட்சியின் மீதுள்ள வெறுப்பு.  ஆனால் என்னைப் பொறுத்தவரை இரண்டாவது காரணத்தும் நம்பிக்கைதான் ஆதாரம் என்று நான் கருதுகிறேன் -- ஏனெனில் ஆட்சியிலிருந்த கட்சியின் மீது வெறுப்பு இருந்தாலும் நம்பிக்கைக்குரிய மாற்றுக் கட்சி ஒன்று இல்லாவிட்டால் வெறுப்பை வாக்குகளாக மாற்றுவது என்பது கடினம்.  டில்லியைப் பொறுத்தவரை, குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்றதால் ஆப் இந்த வெற்றியைப் பெற்றது

ஆனால் ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன என்றால் அது மிகையாகாது. நம்பிக்கைதான் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் என்றால் அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் ஆப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு முறை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தான் என்றுமே தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார்.  ஆனால் புதுதில்லி தொகுதியில் அப்போதைய முதல்வர் ஷீலா தீக்ஷித்தை எதிர்த்துப் போட்டியிட்டு மாபெறும் வெற்றி பெற்றார்.  ஆனாலும் மக்கள் இதனை ஒரு தவறாகவே கருதவில்லை -- காரணம் அர்விந்த் கேஜ்ரிவால் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை, ஊழலற்ற ஒரு அரசைத் தருவார் என்று நம்புகிறார்கள்.

பெரும்பான்மைக்கு  4 எம் எல் ஏக்கள் குறைவானதால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததால், இரண்டாவது பெரிய கட்சியான ஆப் துணைநிலை ஆளுநரால் அழைக்கப்பட்டது.  காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் எந்த நிலையிலும் கூட்டணியே கிடையாது என்று கூறிய கேஜ்ரிவாலுக்கு இது முதல் சவால்.  ஆட்சி அமைக்க வேண்டுமானால் காங்கிரஸின் ஆதரவை நாட வேண்டும் அல்லது மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்.  மறு தேர்தல் வந்தால் அது மக்களால் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதியாகத் தெரியாது.  அது மட்டுமல்ல,  ஆப் ஆட்சி நடத்த லாயக்கில்லாத கட்சி, போராட்டம் நடத்த மட்டும்தான் தெரியும் என்றும் பிற கட்சிகள் கண்டிப்பாக பிரச்சாரம் செய்யும். மக்கள் வாய்ப்புக் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தாமல் மற்றொரு தேர்தல் சுமையை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் கூடவே வரும். இந்த சூழ்நிலையில் 18 விஷயங்களில் பாஜக மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை உறுதியளித்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று புதிய உத்தியைக் கேஜ்ரிவால் கையாண்டார்.  இரண்டு கட்சிகளும் எந்த உறுதியும் அளிக்காத நிலையிலும் காங்கிரஸ் தனது ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்ததும் ஆட்சி அமைக்க முன்வந்தார் கேஜ்ரிவால்.  இது அவர் செய்த முதல் தவறு.  நரசிம்மராவ் செய்தது போல ஒரு மைனாரிட்டி அரசை அமைத்திருக்கலாம்,  ஆட்சி கவிழ்ந்திருந்தாலும் இன்னொரு தேர்தலை சுமத்திய பழி பிற கட்சிகளின் மீதுதான் வீழ்ந்திருக்கும்.  இது காங்கிரஸ் - ஆப் இடையே ஒரு மறைமுக உடன்பாடு என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது.  இதற்கு வலு சேர்ப்பது போல ஷீலா தீக்ஷித் மீது ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கேஜ்ரிவால் கூறியது இருந்தது.


வி ஐ பி கலாச்சாரத்தை ஒழிப்பது, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பது, 700 லிட்டர் தண்ணீர் இலவசமாகத் தருவது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவது ஆகியவைதான் கேஜ்ரிவாலின் மக்களைக் கட்டிய மந்திரமாக இருந்தது. ஆனால் இதில் ஒவ்வொரு வாக்குறுதியிலும் பின்விளைவுகள் ஏராளம்.

வி ஐ பி கலாச்சாரத்தை ஒழிப்பது என்பது சாத்தியமா?  என்பது மட்டுமல்ல அதன் எல்லைகள் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.  முதல்வர் மற்றும் மந்திரிகள் ஆகியோரின் நேரம் பொன் போன்றது என்பதாலேயே அவர்கள் பயணத்துக்கு செலவிடும் நேரத்தைக் குறைக்கும் நோக்கத்தில்தான் சிவப்பு விளக்கு, பைலட் வண்டிகள் என்பதெல்லாம்.  அரசாங்க கார்களை வேண்டாமென்று சொல்வதாலேயே ஒருவர் ஆம் ஆத்மியாக முடியுமா? இதெல்லாம் வெறும் மக்களைக் கவர நினைக்கும் மலிவான தந்திரமாகத்தான் இருக்க முடியும். போக்குவரத்தை வெகுநேரம் தடைசெய்யாமல் அதே சமயம் முக்கிய பிரமுகர்களின் பாதயில் தடங்கல் இல்லாமல் நேரம் வீணாகாமல் செய்வதில் யாரும் குறைகாணப் போவதில்லை. ஆனால் இதையெல்லாம் பெரிய விஷயமாக ஆக்கியது ஒரு அரசியல் தந்திரமாகவே தோற்றமளிக்கிறது.

அடுத்தது அரசாங்கம் அளிக்கும் வீட்டை ஏற்க மாட்டேன் என்று கூறிய கேஜ்ரிவால் திடீரென்று 9000 சதுர அடியில் 5 படுக்கையறைகள் கொண்ட இரண்டு வீடுகளை ஏற்றது சலசலப்பை உண்டாக்கியது.  சாதாரணமாக எந்த முதல்வருக்கும் இந்த மாதிரி வீட்டை ஒதுக்கினால் அது பெரிய பரபரப்பையோ பிரச்சினையோ உண்டாக்கியிருக்காது; ஆனால் நேர்மையின் உச்சத்தில் நாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் கேஜ்ரிவால் விஷயத்தில் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.  அதிலும் முதலில் இதிலென்ன தப்பு என்ற கேஜ்ரிவாலின் கேள்வியும், ஷீலா தீக்ஷித்தின் வீட்டை விட இது பெரியதல்ல என்ற அவரின் நியாயப் படுத்துதலும்  கேஜ்ரிவாலின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்க ஆரம்பித்தது.  அடுத்த நாளே அவர் அந்த வீட்டை வேண்டாம் என்று கூறிவிட்டாலும் இழந்த நம்பகத்தன்மை?

அடுத்ததாக போலீஸ் பாதுகாப்பு.  தனக்கு போலீஸ் பாதுகாப்பே தேவையில்லை என்று கூறிய கேஜ்ரிவாலுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவின் பேட்டியும் கேஜ்ரிவால் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உத்திரப்பிரதேச அரசின் அறிக்கையும் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்ற எல்லா அரசியல்வாதிகளையும் போலத்தான் கேஜ்ரிவால் என்று காட்டியது.

அடுத்ததாக மின்சாரக் கட்டணம் குறைப்பு.  400 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவருக்கும் மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பதவியேற்றவுடனே அறிவித்தார் கேஜ்ரிவால்.  ஆனால் இது மூன்று மாதங்களுக்குத்தான் என்பது அந்த அறிவிப்பு.  அது மட்டுமல்ல அவர் சொன்ன நஷ்டக் கணக்கு உதைக்கிறது.  28 லட்சம் பயனாளர்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாக உபயோகப்படுத்துகிறார்கள் என்று கேஜ்ரிவால் கூறினார். அதே சமயத்தில் இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு 60 கோடி ரூபாய்தான் அரசுக்குக் கூடுதல் செலவாகும் என்றும் கூறினார்.  ஒவ்வொரு பயனாளரும் சராசரியாக 200 யூனிட்டுகள் செலவிடுகிறார் என்றால், கேஜ்ரிவாலின் கணக்குப்படி ஒரு யூனிட்டுக்கு வெறும் 35 பைசா குறைந்தால்தான் சாத்தியம். ஆனால் 4 ரூபாய் ஒரு யூனிட்டுக்கு என்ற நிலையில் இந்தக் கணக்கு சாத்தியமில்லை.  இது ஒருபுறமிருக்க இன்னொரு முக்கிய பிரமுகரான ப்ரஷாந்த் பூஷன் இன்னொரு பேட்டி அளிக்கிறார்.  அவர் கூறுகிறார் "மானியம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும் அல்லது மானியங்களே தேவையில்லை என்ற அளவில்தான் இருக்கும், ஏனென்றால் வணிக நிறுவனங்களுக்கும் மிகு பயனீட்டாளர்களுக்கும் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இது சரிகட்டப்படும்".  இது மானியத்தைக் குறைக்கும் ஒரு வழியாக ஏற்றுக்  கொள்ளலாம் -- ஆனால் கேஜ்ரிவாலின் இன்னொரு கணக்கு உதைக்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் தனியார் மின்நிறுவனங்களை முதன்மை தணிக்கை அதிகாரி தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தனியார் மின் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன, இதை முந்தைய அரசு ஆதரித்து வந்தது, நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்பதே இதன் கருத்து.  தனியார் நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்கும் என்பது உறுதியானால் மிகுமின் பயனாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டி அவசியம் என்ன?  அப்படியானால் பூஷண் அளித்த பேட்டி தனியார் நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வழியில்லை என்பதை அரசு முன்னரே உணர்ந்திருக்கிறது என்று அர்த்தமா?  அப்படியானால் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடுத்த அரசியல் நாடகமா?

அது மட்டுமல்ல,  தனியார் மின்நிறுவனங்கள் வெறும் 20 சதவீதம் மின்சாரத்தைத்தான் வழங்குகின்றன.  மீதமுள்ள 80சதவீதம் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. அவ்வாறிருக்க 20 சதவீதம் மின்சாத்தின் கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும் எவ்வாறு அரசு நிரந்தரமாகக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்பது புரியாத கால்குலஸாக உள்ளது.

அடுத்தது 700 லிட்டர் இலவச தண்ணீர்.  பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது ஒவ்வொரு அரசாங்கமும் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை உரிமை.  தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிக்கு இது தடை போட்டது என்றே சொல்லலாம்.  ஆனால்  நிறைவேற்றப்பட்ட விதம் இதன் பயன் முழுமையாக மக்களுக்குப் போய்ச் சேருமா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம்.  700 லிட்டர் என்பது ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளுக்கான அளவீடு.  வசதி வாய்ந்த குடும்பங்கள் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குடும்பமாகவே இருக்கும்.  வசதி குறைந்த குடும்பங்களில்தான் 5, 6, 7 என்று அதிக பேர் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு 700 லிட்டர் என்பது பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.  அதைவிட, இந்த இலவச அளவைத் தாண்டினால் மொத்த குடிநீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவுப்பு இந்த இலவசத்தையே கேலிக்குள்ளாயிருக்கிறது.  ஏழைகளிடம் வசூலித்து பணக்காரர்களுக்கு இலவசத்தை வழங்கும் திட்டமாகவே இது நடைமுறையில் வந்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் என்ன? பிற கட்சிகள் குற்றம் சாட்டுவது போல அனுபவமின்மையா? கேஜ்ரிவால் ஐ ஆர் எஸ் அதிகாரியாக இருந்தவர்.  அரசாங்கம் என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்லவே?  பின்பு என்ன பிரச்சினை?

ஐடென்டிடி க்ரைஸிஸ் என்று கூறப்படும் அடையாளச்சிக்கல்தான் முதன்மைக் காரணம்.
போராட்டங்கள் மூலம் மக்களின் கவனத்தைக் கவர்ந்து நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சி, குறுகிய காலத்திலேயே ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி நடத்துவதில் இருந்த போராட்டங்களை சமாளிக்கத் திணறத் தொடங்கியது.  போராளியாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கட்சியானது ஆட்சிக்கு வந்ததும் தனது அடையாளம் என்ன என்பதில் குழப்பமேற்பட்டது.  போராட்டங்களால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது என்பதை ஆப் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

அது மட்டுமல்ல, டில்லியில் ஆட்சியைப் பிடித்த ஆப்,  குறுகிய காலத்திலேயே பெற்ற வெற்றியினால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் 300 தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.  ஆகவே டில்லியில் செய்வதை வைத்துத்தான் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை.  இலவசங்களும் கட்டணக் குறைப்பும் சுலபமாக இருந்த அளவுக்கு பொதுமக்களின் பாதுகாப்பும், ஊழலற்ற ஆட்சியும் இருக்கப் போவதில்லை.  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் படை அதிகரிக்கப் பட வேண்டும்.  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறையில் கேஜ்ரிவாலால் எதுவும் அதிரடி மாற்றங்கள் செய்ய முடியாது என்பதே தற்போதைய நிலை.  நிர்பயா கற்பழித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட போது கேஜ்ரிவால் அப்போதைய முதல்வர் வீட்டின் முன் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஆட்சியிலேயே ஒரு பெல்ஜிய நாட்டு சுற்றுலாப் பயணி பட்டப்பகலில் ஜன நடமாட்டம் மிகுந்த கன்னாட் ப்ளேஸுக்கு அருகில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது அவ்வளவு எளிதில் உறுதி செய்யப்படக்கூடிய விஷயம் என்பதை கேஜ்ரிவாலுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

ஊழலற்ற நிர்வாகம் என்பதும் அவ்வளவு எளிதானதல்ல.  ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாகவும் ஊழலுக்குத் தண்டனை உடனடியாகவும் கடுமையானதாகவும் இருந்தால் லஞ்சம் என்பதை கடைமட்டத்திலிருந்து ஒழிப்பது கடினமான காரியமல்ல. ஆனால் பளிச்சென்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் இல்லை இது.  ஊழலற்ற ஆட்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மக்களால் உணரப்பட வேண்டியது.  இலவசங்கள் போல உடனே தெரிவது அல்ல.

ஆனால் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு என்பதுதான் கேஜ்ரிவாலின் மிக முக்கியமான கோஷமாக இருந்தது.  ஆனால் இந்த இரண்டையும் நிறைவேற்றுவதென்பது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது.  இதற்கு நடுவில் பாராளுமன்றத் தேர்தல் வேறு இன்னும் ஓரிரு மாதங்களில்.  இதுதான் இன்றைய சிக்கல்களுக்கெல்லாம் காரணம்.

சோம்நாத் பார்தி.  டில்லியின் சட்ட அமைச்சர்.  இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய போது சாட்சியங்களைக் குலைக்கும் விதமாக நடந்து கொண்டார் என்று பாட்டியாலா நீதிமன்றம் இவர் மீது கண்டனம் தெரிவித்துள்ளது.  பதவிக்கு வந்த சில நாட்களில் சட்டத்துறை செயலரை அழைத்து டில்லியிலுள்ள நீதிபதிகளின் கூட்டத்தைக் கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.  அதற்கு சட்டத்துறை செயலர் மறுப்பு தெரிவித்து, நீதிபதிகளின் கூட்டத்தைக் கூட்ட உயர்நீதிமன்ற நீதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  இது வழக்கறிஞராக இருந்த மந்திரிக்குத் தெரியாதா? அதனால் இது ஆட்சி அதிகாரத்தின் விளைவாகவே தோன்றுகிறது.

ஒரு வழக்கறிஞராக இருந்த மந்திரிக்கு வாரண்ட் இல்லாமல் ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ய முடியாது என்பது தெரியாதா?  ஆனாலும் மீடியாக்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தெற்கு டில்லியில் ஆப்ரிக்க மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனையிடுமாறு போலிஸை வற்புறுத்தியது எதற்காக?  இந்நிகழ்ச்சி போலீஸின் மீது குற்றம் சாட்டுவதற்காகவும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்குப் பொறுப்பை தட்டிக் கழிக்கவும் ஒரு உத்தியாகவே தோன்றுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சி பன்னாட்டு உறவை பாதிக்கும் அளவிற்குச் சென்றது வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.  கோப்ரகாடேவிற்கு அமெரிக்காவில் நடந்த அத்துமீறிய செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாம்,  உகாண்டா மற்றும் நைஜீரிய நாட்டுப் பெண்களுக்கு நடந்த செயலுக்கு என்ன தெரிவிக்கப் போகிறோம்?  சம்பவம் நடந்த இடத்தில் அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் பேசியதாகக் கூறப்படுகின்றவை நடந்த நிகழ்ச்சிகள் இனவாதமாகவே தோன்றுகிறது.

இப்போது நீதிமன்றம் இந்தக் குற்றத்தில் சம்மந்தப்பட்டவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பிப்ரவரி 14 அன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளது.  அதன்படி அமைச்சர் சோம்நாத் பார்தியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டால் கேஜ்ரிவால் என்ன செய்வார்?  சி பி ஐயின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்ட 18 டில்லி நீர் வாரியத்தின் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த கேஜ்ரிவால், அமைச்சர் சோம்நாத் பார்தியை பதவியிலிருந்து நீக்குவாரா? கேஜ்ரிவாலின் சமீபத்திய பேட்டிகளில் கூறியிருப்பதைப் பார்க்கும் போது அவருக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

இதற்கு நடுவில் ஒரு பக்கம் கட்சியின் இன்னொரு முக்கிய பிரமுகரான பூஷணின் காஷ்மீர் மற்றும் நக்சல்பாரிகளுக்கு ஆதரவானக் கருதப்படும் பேச்சு, இதை கட்சியின் கருத்தல்ல அவரது சொந்தக் கருத்து என்று கேஜ்ரிவால் விலகியிருப்பது கட்சிக்குள் எந்த ஒரு விஷயத்திலும் பொதுக்கருத்து இல்லை என்பதையே காண்பிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியில் இந்திய கார்ப்பொரேட் துறையிலிருந்து பலரும் சேருவது அந்தக் கட்சியின் மீதும் அதன் தலைமையின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.  ஆனால் சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டுக்கான முந்தைய அரசின் அனுமதியை கேஜ்ரிவால் ரத்து செய்திருப்பது அவர்களை யோசிக்க வைத்துள்ளது.

கேஜ்ரிவாலின் முன்னுள்ள பிரச்சினை இதுதான்:  பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது உடனடி சாத்தியமல்ல.  ஊழலற்ற நிர்வாகம் என்பதும் உடனே வெளித்தெரியும் காரியமுமல்ல.  இந்த இரண்டும்தான் ஆம் ஆத்மி கட்சியின் அடிநாதம்.  பாராளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் போட்டியிட வேண்டும் என்ற கேஜ்ரிவாலின் ஆசைதான் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் எனலாம்.  எம் எல் ஏக்கள் யாரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றவர் அடுத்த சில நாட்களிலேயே கட்சி விரும்பியதால் தான் போட்டியிடப் போவதாகக் கூறியிருப்பது இவரை ஒரு சராசரி அரசியல்வாதியாகவே காட்டுகிறது. பாராளுமன்றத்துக்கு முன் தனது முகமூடி கிழிந்து விடுமோ அல்லது தன்னால் ஆட்சி புரிய முடியாது, ஆட்சிக்கு வருமுன் கூறியது போல் இவற்றையெல்லாம் உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பது தெரிந்து விடுமோ என்று கேஜ்ரிவால் பயப்படுகிறார். இந்த பயம் அவரைத் தவறான வழியில் செலுத்துகிறது.  போராட்டங்கள் மூலமாகத்தான் மக்களைக் கவர முடியும் என்று நம்புகிற கேஜ்ரிவால், தான் ஆட்சியில் இருப்பதை விட, ஆட்சி கவிழ்ந்து, அதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக வின் மீது சுமத்தி, மீண்டும் போராட்டங்கள் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறார் கேஜ்ரிவால். அதற்கு ஒரே வழி இந்த மாதிரி அதிரடி நடவடிக்கைகள், அதன் மூலம் மக்களின் கவனத்தையும் ஆதரவையும் கவர்வது, எப்படியாவது காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற வைப்பது என்பவைதான்.  மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைப்பது,  மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிற பேச்சுக்கள் மற்றும் செய்கைகள் இவையெல்லாம் கேஜ்ரிவாலின் பாராளுமன்றக் கனவு, நாட்டின் துர்சொப்பனம்.  கேஜ்ரிவால் எவ்வளவு வேகமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றாரோ  அதை விட வேகமாக அதை இழக்கப் போகிறார்.  ஆனால் கேஜ்ரிவால் என்ற தனிமனிதனின் தோல்வியை விட, ஊழலுக்கு எதிரான இயக்கங்களின் நம்பகத்தன்மையையே கேலிக்கூத்தாக்குகிற செயலாக இது அமையப் போவதுதான் நாட்டின் துர்சொப்பனம்.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய தி அனிமல் ஃபார்ம் என்ற நாவல் நம் கண்முன்னே நாடகமாக விரிகிறது.