குருக்ஷேத்திரம். மரணப்படுக்கையில் துரோணர். அவரைச் சுற்றி துரியோதனாதிகள்,
கர்ணன், பீஷ்மர் மற்றும் பலர். அசுவத்தாமன் இறந்தான் என்று தருமரை
முழங்கச் செய்து, ஆனால் இறந்தது என்ற யானை என்பது தெரியாவண்ணம்
சங்கொலித்து துரோணரை ஏமாற்றி வீழ்த்தி விட்டனர்.
சற்றே பின்னோக்கிப்
போவோம்.
பாண்டவர்களும்
கௌரவர்களும் குரு துரோணரிடம் பயின்று கொண்டிருக்கின்றனர். அப்போது
ஒரு நாயின் வாய் அது குரைக்க முடியா வண்ணம் அம்புகளால் தைத்திருப்பதைக் கண்ட அர்ஜுனன்
ஆச்சரியப்பட்டு இதை சாதித்தது யாரென எல்லோருடனும் புறப்படுகிறான்.
அங்கே ஏகலைவனைக் காண்கின்றனர்.
அர்ஜுனன் துரோணரிடம்
கேட்கிறான்: "என்னை இந்த உலகிலேயே மிகச் சிறந்த வில்லாளியாக்குகிறேன்
என்று கூறினீர்களே குருவே, இன்று வேறொருவன்
என்னை விடச் சிறந்த வில்லாளியாக இருக்கிறானே, இவன்
இருக்கும் வரை நான் எப்படி உலகிலேயே மிகச்சிறந்த வில்லாளி நான்தான் என்று கூற முடியும்?"
துரோணர் யோசித்தார். ஏகலைவனைப் பார்த்துக் கேட்டார்
"ஏகலைவா, என் ஆசியினால்தான்
நீ வில்வித்தை கற்றாய் என்பது உண்மையானால், எனக்கு
உண்டான குருதக்ஷிணையைத் தருவாயா?"
"இதிலென்ன
சந்தேகம் குருவே? எது
வேண்டுமோ கேளுங்கள், உடனே தருகிறேன்"
"நன்று
ஏகலைவா, உன் குருபக்திக்கு மெச்சினேன்.
நல்லது ஏகலைவா, தக்க சமயத்தில் நான் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் அதுவரை நீ வில்லைத் தொடக் கூடாது. சம்மதமா?"
ஏகலைவன் சந்தோஷமாகச்
சொன்னான் "அப்படியே குருவே,
இனி நீங்கள் சொல்லும் வரை நான் வில் மட்டுமல்ல, எந்த
ஆயுதமும் ஏந்த மாட்டேன்".
மறுபடியும்
போர்க்களம். உயிர்
பிரியும் தருவாயில் துரோணர்.
"மகனே அசுவத்தாமா, பாலென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த நீ, தந்தையே பால் என்றால் என்ன என்ற கேட்டவுடன் உனைப் பெற்ற நான் பட்ட வேதனை சொல்லிலடங்காதடா. உனக்காகவே எனது ஆருயிர் நண்பன் துருபதனிடம், அவன் மாணவப்பருவத்தில் கொடுத்த வாக்கை நம்பி ஐந்து மாடுகள் வாங்கச் சென்றேன். ஆனால் நான் பாதி ராஜ்யம் கேட்க வந்ததாக எண்ணி என்னை யாரென்றே தெரியாது என்று சொல்லி அவமானப்படுத்தி விட்டான் துருபதன். அவனைப் பழி வாங்கவே வேதமோதும் அந்தணனான நான், நான் கற்ற தனுர்வேதத்தை பயிற்றுவிக்கும் எண்ணத்தோடு ஷத்ரியனாக மாறினேன். அருமை மகனே, நான் கற்றுக் கொடுத்த தனுர் வேதமே இன்று உனக்கு எமனாகி விட்டதடா... என் கைகள் நடுங்குகிறது...உடல் தளர்கிறது....பார்வை மங்குகிறது...மனம் செயலிழந்து விட்டதடா.. உனக்கு நானே காலனாகி விட்டேனடா என் செல்வமே... இதோ அர்ஜுனனின் அஸ்த்திரங்கள் எனை நோக்கி சரமாரியாக வந்து கொண்டிருக்கின்றன...ஆனால் இனிமேல் அவன் என்னைக் கொல்ல முடியுமா? நீ இறந்து விட்டாய் என்று தருமன் கூறியவுடனே நான் மடிந்து விட்டேனடா மகனே, இங்கிருப்பது வெறும் பிணம்தான்...ஆனால் உன்னை அவர்களால் எப்படியடா கொல்ல முடிந்தது? வேறு யார் கூறியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன், ஆனால் கூறியது தருமனாயிற்றே...நம்பாமல் எப்படியடா? ஒன்று மட்டும் நிச்சயம்...உன்னை நிச்சயம் சூதால் அவர்கள் கொன்றிருப்பார்கள்...நேருக்கு நேர் நின்று உனை வெல்ல யாரால் முடியும்? நான் கற்ற வித்தைகளையெல்லாம் உனக்கும் கற்றுக் கொடுத்தேனடா? ஏ பாவி அர்ஜுனா, கற்றுக் கொடுத்த ஆசாரியனின் மகனையேக் கொல்லத் துணிந்தாயோ? என் மகனைக் கொன்ற உனை நான் விடமாட்டேன்"
"ஏகலைவா, வா"
தனது மானசீக குருவை நேரில் வணங்கினான் ஏகலைவன்.
"ஆசீர்வதியுங்கள் குருவே"
"ஏகலைவா, நான் சொல்லும் வரை வில்லைத் தொட மாட்டேன் என்று பிரதிக்ஞை செய்தாயல்லவா?"
"இன்று வரை நான் வில்லேந்தவில்லை குருவே"
"இப்போது அதற்கு நேரம் வந்து விட்டதடா என் கண்ணே.. மகனை இழந்து இனியும் வாழ எனக்கு ஆசையில்லை. ஆனாலும் என் மகனைக் கொன்ற பாண்டவர்களை நீ கொல்ல வேண்டும். செய்வாயா?
"ஆணையிடுங்கள் குருவே, செய்து முடிக்கிறேன்".
பீஷ்மரும்
வீழ்ந்து கிடக்கிறார். கர்ணன் படைக்குத் தலைமையேற்கிறான். யுத்தம் பயங்கரமாக நடக்கிறது. யுத்தத்தின் போக்கையே மாற்றக் கூடிய
சக்தி கர்ணனுக்கு இருப்பதை உணர்ந்த கண்ணன், சூழ்ச்சியால்
கர்ணனை வீழ்த்துகிறான்.
கர்ணன் வீழ்ந்து
கிடக்கிறான். அப்போது
அர்ஜுனனும் தன் தேரை விட்டுக் கீழே இறங்குகிறான். வீழ்ந்து கிடக்கும் கர்ணனைக் காணும்போது
அர்ஜுனனும் சற்றே திகைக்கிறான். தான் செய்தது
சரியா தவறா என்று குழம்புகிறான். வெற்றிக்காக
எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யார் காரணம்?
கண்ணனின் போதனையா?
கர்ணனின் வீரமா?
தனது பதவி
வெறியா?
அல்லது தோல்வி
பயமா?
எண்ணற்ற கேள்விகளால்
சிக்குண்டு தவிக்கும் அர்ஜுனன் சற்றே தலை தூக்கிப் பார்த்த போது
.... கண்ணா என்ன
அது? கர்ணன் வீழ்ந்து கிடக்கும் இடத்திலிருந்து
எனை நோக்கி வந்து கொண்டிருக்கிறதே ஒரு அம்பு....
கண்ணன் தனது
மாயத்தைக் கெயெடுக்குமுன்னர் அம்பு அர்ஜுனனின் நெஞ்சைத் துளைத்தது.
கண்ணன் யாரென்று பார்ப்பதற்குள் சரமாரியாகப் புறப்பட்ட அம்பு மழை பீமனைத் துளைத்தது.
அர்ஜுனனையும்
பீமனையும் இழந்த சேதி கேட்டு திரௌபதி கதறியபடி போர்க்களம் வருகிறாள். "அய்யகோ,
இனி என் செய்வேன்!
தருமம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே!
அதர்மம் தலைவிரித்தாடுகிறதே!
இனி அதர்மத்துக்கு அழிவே கிடையாதா?
தருமம் மீண்டும் தோல்வி அடைவதா? யார் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது? தேரிலிருந்து கீழே இறங்கி ஆயுதமின்றி
இருந்த அர்ஜுனனைக் கொன்ற பாதகத்தைச் செய்தது யார்? தம்பி இறந்த செய்தி கேட்டதும் அவனைப்
பார்க்க ஓடோடி வந்த பீமனைக் கொன்ற பாதகன் யார்? ஷத்ரிய தர்மத்திற்கும் யுத்த தர்மத்திற்கும்
புறம்பாக நடந்த
அந்தக் கயவன் யார்"
ஏகலைவன் திரௌபதியை
வணங்கினான். "மன்னிக்க வேண்டும் தாயே,
நான்தான் அந்தக் கயவன், பாதகன் எல்லாம்.
ஆனால், நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்
தாயே, ஷத்ரிய தர்மம் எனக்குப் பொருந்தாது,
ஏனென்றால் நான் ஷத்ரியன் கிடையாது...யுத்த
தர்மம் எனக்குப் பொருந்தாது, ஏனென்றால்
நான் இங்கே யுத்தத்தில் பங்கேற்க வரவில்லை. எனது குருவின் ஆசைக்கிணங்க,
அவர் குருதக்ஷிணையின் ஒரு பாகமாகத்தான் நான் இதைச் செய்தேன். ஆகவே ஷத்ரிய தர்மம் மற்றும் யுத்த தர்மம்
என்னைக் கட்டுப்படுத்தாது.
மேலும் நான்
செய்தவை பொதுதர்மத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களும் கிடையாது தாயே. நான் ஒரு ஷத்ரியனோ அல்லது அரசகுமாரனோ
அல்ல என்பதாலும் தன்னைவிட ஒருவன் பெரிய வில்லாளியாக வரக்கூடாது என்ற சுயநலத்தாலும்
துரோணரைத் தூண்டி விட்டவன் அர்ஜுனன். அதனால் நான் கூறும்வரை நீ வில்லைத்
தொடக்கூடாது என்ற தக்ஷிணையக் கொடுத்தவன் நான். இன்று
அதே குருவே, தனது கடைசி மூச்சிருக்கும்போது நான்
வில்லெடுத்து பாண்டவர்களை அழிக்க வேண்டும் இப்போது என்று கேட்டுக் கொண்டபோது நான் எப்படி
மறுக்க முடியும் தாயே?
அர்ஜுனனுக்கும்
துருபதனுக்கும் என்ன பகை தாயே?
துரோணருக்கு குருதக்ஷிணையாக துருபதனைத் தோற்கடிக்கவில்லையா
அர்ஜுனன்? அவனுக்கு ஒரு தர்மம் எனக்கு ஒரு தர்மமா?
மேலும் ஆயுதமின்றி
தேரைவிட்டுக் கீழே இறங்கி நின்ற அர்ஜுனனைக் கொன்றது யார்? இறந்து கிடந்த தம்பியைக் காண வந்த பீமனைக்
கொன்ற பாதகம் செய்தது யார் என்று கேட்டீர்களே தாயே? அதற்கு
முன்னர் இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுங்கள். ஆயுதமின்றிக் கீழே இறங்கி நின்ற கர்ணனைக்
கொன்றது யார் தாயே? சகதியில்
சிக்கிக் கொண்ட தேர்ச்சக்கரத்தை எடுக்க முயன்ற போது, கையிலே
ஆயுதம் இல்லாமல் இருந்தாலும், சக்கரமும்
ஒரு ஆயுதம்தான் என்று ஒரு சமாதானம் கூறிக்கொண்டு கர்ணனைக் கொன்றது யார் தாயே?
நீங்கள் அரச
குமாரர்கள், ஷத்ரியர்கள்.
தர்மங்கள் உங்களுக்குத்தான் அதிகமாகப் பொருந்தும் தாயே...
இப்போது சொல்லுங்கள்,
நான் செய்தது தவறா?"
திரௌபதி திகைக்கிறாள். "ஏகலைவா நீ என்ன சொன்னாலும் நீ
செய்த பாவங்களை நீ மறைக்கவோ மறுக்கவோ முடியாது... பலபேர்
இருக்கும் சபையில் என்னை அவமானப் படுத்தியவன் துரியோதனன்...வஞ்சகமாகச்
சூதாடி எங்கள் நாட்டைப் பறித்தவன் துரியோதனன்...ஆகவே
அவன் செய்த அதர்மத்தைக் காட்டிலும் நாங்கள் செய்தது ஒன்றும் பெரிதாகி விடாது. ஷத்ரிய தர்மமும்,
யுத்த தர்மமும் பொருந்தாத உன்னை நிறுத்திப் போரிடும்போதே தெரியவில்லையா இது
அதர்மம் என்று?"
ஏகலைவன் கூறினான்
"மறுபடியும் நீங்கள் தர்மத்திற்கு மாறாகப் பேசுகிறீர்கள் தாயே...
பல பேர் வந்து கொண்டிருக்கிற நேரத்திலே, தரையைத்
தண்ணீரென்று மயங்கிய மதிப்பிற்குரிய மைத்துனரைப் பார்த்து தந்தையைப் போல தனையனும் அந்தகனோ
என்று பகடி செய்தது நியாமமா? தருமமா?
ஒருவரது உடற்குறையைப் பெரிது படுத்துவது, அதுவும்
தங்களுக்கு மாமனார் ஸ்தானத்தில் உள்ள ஒருவரையும் தங்களது மைத்துனரையும் கேலி செய்தது
நியாமமா? புதிதாக
வந்த ராஜ்யமும், ராஜசூய யாகம் தந்த தைரியமும்,
வந்து குவிந்த பரிசுகளும், கப்பம் கட்டத்
தயாராக வந்த சிற்றரசுகளும் தங்களுக்கு இந்த ஏளனம் செய்யும் மனப்பாங்கைத் தந்தனவோ?
துரியோதன்
சபையிலே பீஷ்மர், துரோணர், கிருபர்
முதலானோர் தர்மத்தைப் பற்றிப் பேசவில்லை என்று அங்கலாய்த்தீரே தாயே,
உங்களது இந்த மோசமான நடத்தையைக் குந்தி தேவியோ அல்லது மாத்ரி தேவியோ கடிந்துரைக்கவில்லையா?
அல்லது தங்களது கணவன்மார்கள்தாம் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லையா? அகந்தைதான் எல்லா அழிவுக்கும் காரணம்
என்பது தங்களுக்குத் தெரியாததா அல்லது மமதை மறைத்து விட்டதா?
என் தந்தை
ஒரு காலத்தில் கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டவர் தாயே.. என்
மீது பொறாமை கொண்டு அர்ஜுனன் துரோணரைத் தூண்டி விடாமல் இருந்திருந்தால் நான் உங்களோடு
சேர்ந்து போர் புரிந்திருப்பேன்...ஆனால் என்னை
உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வைத்தது எது? அர்ஜுனனின்
பொறாமை அல்லவா தாயே? பொறாமை
உடனிருந்து கொல்லும் வியாதி என்பது தங்களுக்குத் தெரியாதா?
யுத்த களத்திலே
முகத்தை மூடி மறைத்து பீஷ்மரிடம் தீர்க சுமங்கலியாக இரு என்று வரம் பெற்றவர்தானே நீங்கள். ஒரு பெண்ணை முன்னிறுத்து பீஷ்மரை வீழ்த்திய
நீங்கள் தர்மத்தைப் பற்றிப் பேசலாமா தாயே"
திரௌபதி சமாதானமாகவில்லை. "ஏகலைவா,
உனது வாதங்கள் உன் அதர்மத்தை மாற்ற முடியாது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவென்று கௌரவர்களை
ஆதரித்தான் கர்ணன். குருதக்ஷிணை
என்று நீயும் அவர்களை ஆதரிக்கிறாய், அத்தோடு மாற்ற
முடியா பாதகமும் செய்து விட்டாய். நாங்களும்
ஏதோ குற்றம் செய்துள்ளோம்,, ஆனால் கௌரவர்கள்
செய்த குற்றங்களும் அதர்மங்களும் கணக்கிலடங்காதவை...அவர்களுக்குத்
துணை போன நீயும் தீராத அதர்மம் செய்து விட்டாய். நீயும்
உன் வம்சமும் அடியோடு ஒழிந்து போவீர்கள்" சாபமிட்டாள் திரௌபதி.
தர்மன் வருகிறான். "ஏகலைவா,
நீ செய்தது அதர்மமில்லை. உன்னைப் பொறுத்த
வரை இது தர்மமே, ஏனெனில் தர்மம் அதர்மம் என்பது மிகவும்
சூக்ஷுமமானது, யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாதது. இனியும் யுத்தம் தொடர நான் விரும்பவில்லை,
எல்லாவற்றையும் துரியோதனே எடுத்துக் கொள்ளட்டும், நாங்கள்
மறுபடியும் கானகம் திரும்பி விடுகிறோம்,
இந்த நாடும்
உண்மையில் திருதிராஷ்ட்ரனுக்குச் சொந்தமானது, அவர்
அந்தகனானதால் சிறிது காலம் அது எம் தந்தை பாண்டுவினிடம் வந்தது, திருதிராஷ்ட்ரன் குறையுடையவர் என்று
சொல்லப் போனால், எம் தந்தை பாண்டுவும்தான் குறையுடையவர்.
தர்மப்படி பார்த்தால், இரண்டு குறையுடையவர்களில்
ஒருவர் இப்போது உயிரோடிருக்கிறார், அவர்தான் எங்கள்
பெரிய தந்தை திருதிராஷ்ட்ரன், ஆகவே அவரது
மகன்கள் அரசாள்வதே தர்மம், இத்தனை நாள்
மாயை என்னை மறைத்துக் கொண்டிருந்தது, உன் மூலம்
அது அகன்றது, நன்றி ஏகலைவா"
தருமன் தனது
தம்பிகள் சகாதேவன் மற்றும் நகுலனுடனும் திரௌபதியுடனும் போர்க்களத்தை விட்டுப் போகிறான்.
மறுபடியும்
பின்னோக்கிப் போகிறோம், கானகத்தில்
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுடன் துரோணர். தன் சிலையை வைத்துத் தனது ஆசிகளால்
வில் வித்தை பயின்றேன் என்று சொன்ன ஏகலைவனைப் பார்க்கிறார் துரோணர்.
அவர் மனது
பேசுகிறது "ஏகலைவா,
எனது சுயநலத்திற்காக நான் உன்னையும் பயன்படுத்தப் போவதில்லை. எனது ஆணவத்திற்காக,
சபதத்திற்காக, பாசத்திற்காக நான் எனது சிஷ்யர்களைப்
பயன்படுத்துகிறேன். ஸ்வதர்மை
விட்டு விலகிச் செல்கிறேன்.
பெற்ற பாசத்திற்காக குருவம்சத்தினரை பலி கொடுக்கப் போகிறேன்.
என்ன ஒரு கேவலமான நிலை இது. ஆனாலும் நீ
பரிசுத்தமானவன், உனக்கும் உன் குலத்துக்கும் பழிச்சொல்லும்
இழிச்சொல்லும் வராமல் பார்த்துக் கொள்வது இந்த சிஷ்யனுக்கு இந்த குருவின் தஷிணை
-- என் புகழை மேலும் உலகறியச் செய்ததற்கு.
என் பெயருக்குக் களங்கம் வந்தாலும் பரவாயில்லை, தர்மம் சாயக் கூடாது. அதற்கு நீ காரணமாகக் கூடாது. சகலம் கிருஷ்ணார்ப்பணம்" "
இப்போது துரோணரின்
உதடுகள் பேசியது "ஏகலைவா,
அப்படியானால், குரு தஷிணையாக உனது வலது கை கட்டைவிரலைக்
கொடுப்பாயா?"
1 comment:
சரியான பதிவு பலசெய்திகளை தெரிந்து கொண்டேன்
Post a Comment