Friday, January 25, 2008

பெண்ணுக்கு எதிரி யார்?


பெண்ணுக்கு எதிரி யார்? 


சொன்னால் அடிக்க வருவார்கள் பெண்ணுரிமைவியாதிகள். ஆனால் பல நேரங்களில் பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான்.

முதல் எதிரி மாமியார் ரூபத்தில். மாமனார் கொடுமை என்பது ஏதாவது சில இடங்களில்தான். ஆனால் மாமியார் கொடுமை என்பது எல்லா இடங்களிலும். மாமியாரும் ஒரு பெண்தானே? பின் ஏன் ஆண்கள்தான் பெண்களுக்கு எதிரி என்பது மாதிரிப் பேசுகிறீர்கள்?


தனது பெண் தாய் வீட்டிற்கு வந்தால் "பாவம், சில நாளாவது அவள் தாய்வீட்டில் ஓய்வு எடுத்துச் செல்லட்டும்" என்று சொல்லும் தாய், தனது மருமகள் அவள் தாய் வீட்டிற்குச் சென்றால் மட்டும் பொருமுவது ஏன்?

தனது பெண் வாழச் செல்லும் வீட்டில் மாமியார் மற்றும் நாத்தனார் இருக்கக் கூடாது என்று நினைக்கும் பெண்கள், தான் மட்டும் மகனோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

தன் மகளைத் தனிக் குடித்தனம் போகச் சொல்லும் தாய், தனது மகனை அவ்வாறு போகாதே என்று தடுப்பதன் காரணம் என்ன?

தான் பெற்ற துன்பம் பெறுக தனது மருமகள் என்பது தானே?

பெண்கள் தங்களது சிறப்பம்சமாக நினைப்பது தங்கள் புற அழகை மட்டும்தான். அதற்காக நான் பெண்கள் ஆண்களைப்போல தலை முடியைக் கத்தரித்துக் கொண்டு லுங்கி சட்டை அணிந்து கொண்டு தங்களை கோரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அழகுதான் தனது ஆயுதம் என்று நினைக்காதீர்கள்; அது நம்ப முடியாத ஆயுதம்; இதை விட வலிமையான ஆயுதம் பிற பெண்களிடத்தில் இருக்கும் போது உங்கள் ஆயுதம் தோற்றுப் போகும். அது மட்டுமல்ல, ஒரு கால கட்டத்திற்குப் பிறகு நிராயுதபாணியாக நிற்பீர்கள்.

நானும் பல தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். பொருந்தாத் திருமணங்கள் என்று நான் எண்ணியவை அவை. ஒன்று கணவன் நன்றாக இருக்க மாட்டார் அல்லது மனைவி நன்றாக இருக்க மாட்டார். சில பெண்களைப் பார்க்கும்போது இவர்களுக்கு எப்படி கல்யாணம் ஆகும் என்று நினைத்திருக்கிறேன். இப்போது அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வரும்போது புன்னகைக்கிறேன். அவர்கள் மண வாழ்வு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

ஆனால் மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருதிய பலர் இன்று மகிழ்ச்சியற்று, சில இடங்களில் பிரிந்தும் இருக்கின்றனர். ஆகவே அழகு என்பது அன்புக்கு அடையாளமாகாது.

உடனே ஆணழகன் என்பது என்ன? ஆண்களும் அப்படித்தானே என்று வாண்டுகள் கிளம்ப வேண்டாம். ஆணழகன் போட்டியில் முயற்சியுடைய எல்லோரும் பங்கு கொள்ளலாம். உடற்பயிற்சிதான் முக்கியம். பிறப்பால் பெற்ற நிறமோ அல்லது முக லட்சணமோ அல்ல. உலக அழகிப் போட்டிகள் அப்படி அல்லவே! சமீபித்தில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். எனது நண்பர்கள் பலர் கேட்டனர் "மச்சி, இதையெல்லாம் எப்படிடா போட்டியிலே நுழைய விட்டார்கள்" இதன் உண்மையான நோக்கம் இதுதான். எங்கெல்லாம் அழகிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் பன்னாட்டு காஸ்மெடிக் கம்பெனிகள் வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

அடுத்தது பெண்கள் படிக்கக் கூடாதா?

அம்மணி, பெண்கள் படிக்க வேண்டும், தாராளமாக, ஏராளமாகப் படிக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். படிப்பு என்பது வேலை பார்க்கத்தான் என்று நினைக்காதீர்கள். கல்வி என்பது அறிவுக்காகத்தானே தவிர பணத்துக்காக அல்ல. இப்படி தவறாக நினைப்பதால்தான் பெண்கள் வேலக்குப் போகக்கூடாது என்று சொன்னால் உடனே நான் படித்த கல்வி வீணாகப் போவதா என்று சண்டைக்கு வந்து விடுகின்றனர். கல்வி என்றும் அழியாது. வீணாகப் போவதற்கு அது என்ன முந்தா நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி ரசமா?

அடுத்தது பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களைக் காப்பிஅடிப்பது, அவர்கள் செய்வதையெல்லம் செய்வது என்று நினைக்காதீர்கள். ஆண்களுக்கென்று சில குணாதிசயங்கள் உள்ளன அது போல பெண்களுக்கென்று சில குணாதிசயங்கள் உள்ளன. அதனை மாற்ற நினைக்காதீர்கள். ஆனால் இன்று பெண்ணுரிமை பேசும் பலரும், ஆண்கள் செய்யும் வேலைகளை நாங்களூம் செய்வோம், அதுதான் பெண் சுதந்திரம் என்று நினைக்கின்றனர். சுஜாதா சொல்வது போல, ஒரு ஆணால் சுவற்றோரம் அசிங்கம் செய்ய முடியும், வெய்யில் காலத்தில் ஒரு அரை டரௌசருடன் சுற்ற முடியும். ஆஸ்த்ரேலியாவின் பலம் வேகப் பந்து வீச்சு. அதை நம்மால் ஈடுகட்ட முடியாது. அப்படிச் செய்ய எண்ணியதால்தான் தோற்றோம். பிறகு நமது பலமாகிய ஸ்பின் நமக்குக் கை கொடுத்தது. ஜெயித்தோம். ஆகவே நமது பலம் என்ன என்பதை உணர்ந்து அதில் கவனம் செலுத்திடுவோம். போராட்டம் என்பது நமது களத்தில், நமது தளத்தில் இருக்க வேண்டும்; எதிரியின் இஷடப்படி அல்ல.

சுதந்திரம் என்ற பெயரில், கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, உடலின் பல பாகங்களும் தெரியும்படி ஆடை அணிவது போன்ற வக்கிரங்களுக்கு முடிவேயில்லை. இதுவா சுதந்திரம்? நம் உடலை எல்லோருக்கும் காட்சிப் பொருளாக்குவதா புதுமை? ஏன் பார்க்கிறீர்கள் என்று திருப்பிக் கேட்காதீர்கள். பார்ப்பதற்காகத்தானே திறந்து போடுகிறீர்கள்? மேலும் அதுதான் உங்கள் அழகு, பலம், சொத்து என்று சொல்லிக் கொள்ளும் போது, உங்கள் சொத்தை நாங்களும் மதிப்பிடிகிறோமே!


ஒரு ஆண் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது அவரிடத்திலே கேட்டார்கள் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று.

அவர்கள் நாலு பாத்திரங்களில் பாலை ஊற்றச் செய்தார். பிறகு அவற்றில் ஒரு பாத்திரத்திலுருந்து ஒருகரண்டி மோரை ஊற்றச் செய்தார். இப்போது அந்த நான்கு பாத்திரத்திலிருந்த பாலும் சிறிது நேரத்தில் தயிரானது. இப்போது எந்த மோரினால் இந்த நான்கு பாலும் தயிரானது என்று கூற முடியும்.

அதேபோல், ஒரு பாத்திரத்தில் பாலை வைத்து நான்கு பாத்திரங்களில் இருந்த மோரை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றினார்கள். இப்போது கூறுங்கள் எந்த மோரினால் இந்தப் பால் தயிரானது என்று கூற முடியுமா?

 

இது பெற்றோர் யார் என்று முடிவு செய்வது மட்டுமன்று. இதன் பின் பல சிக்கல்களும் உள்ளன. நான்கு மணம் அனுமதி அளித்தது கூட யுத்தத்தில் பெருமளவு ஆண்கள் இறந்து விட்டதால்தான். அது மட்டுமன்றி விதவைகளின் திருமணத்தை ஆதரித்தவரும் அவர்தான்.

முதலில் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் வேண்டுவன என்ன என்பதைப் பட்டியலிடுங்கள். எது வேண்டும் என்று தெரியாமலே போராடுவது எதனையும் பெற்றுத் தராது.

பொருளாதார சுதந்திரம் என்பது ஒன்று. அம்மணிகளே, ஒரு ஆண் சம்பாதிப்பதை எல்லாம் அவனே செலவு செய்வது என்பது முடியாத காரியம். அவனுக்குக் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. அப்படி குடும்பத்தைக் கவனிக்காதவர்கள், தறுதலைகள். இதுவா நீங்கள் வேண்டும் சமத்துவம்? அது மட்டுமல்ல, கணவன் மனைவி இருவரும் பணி புரியும் குடும்பங்களில் இது ஒரு முக்கியமான பிரச்சினை. இது சம்பளம் உபரியாக இருக்கும் குடும்பங்களில் பிரச்சினையில்லை. பட்ஜெட் போட்டு வாழும் குடும்பங்களில், மனைவி தனியாகச் செலவழிக்க ஆரம்பித்தால், திடீரென்று ஒரு தேவை என்று வரும்போது கடன் கேட்பது ஆண்கள்தான்; பெண்களல்ல. பெண்கள் கடன் கேட்டால் உடனே கொடுக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதன் பின் விளைவுகளை எண்ணிப் பார்த்தீர்களா? ஆண்களளில் பெரும்பாலானோர் எப்போதும் பெண்களை போகப் பொருளாகவே எண்ணுகின்றனர் (வெட்கக் கேடானா உண்மை,ஆனால் இதிலும் பெண்களின் பங்கு இல்லாமல் இல்லை), இந்த நிலையில் பெண்கள் கடன் கேட்க வேண்டுமா?

அடுத்தது முடிவெடுக்கும் சுதந்திரம். ஏற்கனவே சொன்னது போல ஒரு பெண் வெளியுலகத்தில் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும்போது அவள் பெண் என்ற விஷயமும் கருத்தில் கொள்ளப் படுகிறது. It creates a bias and unfavaroble situations for all, most of the times detrimental to the woman.

கூட்டாட்சி தத்துவம் என்பது வீட்டுக்கும் சரி, நாட்டுக்கும் சரி உதவாது. இந்தக் கண்றாவியைத்தான் கடந்த சில வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே?

ஒரு குடும்பத்தில், ஒருவர் Dominating ஆகவும் ஒருவர் submissive ஆகவும் இருக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் அது வேலைகாவாது. ஒருவர் மூளையாகவும் ஒருவர் இதயமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஈருடல் ஓருயிர். இரண்டு மூளைகள் இருந்தால் சீக்கிரமே போக வேண்டியதுதான்.

மீண்டும் சந்திப்போம்.






No comments: