வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.
வள்ளுவர் இந்துவா? பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.-நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.
--இளங்கோ (இலண்டன்)
காலஞ் சென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தனது அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பகுதியில் வள்ளுவர் ஓர் இந்து என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இறுதியில் தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்று அந்தக் கட்டுரையை முடிக்கின்றார்.
கவியரசர் கண்ணதாசனைப் போன்று பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர்.
இவ்வாறு திருவள்ளுவரை இந்துவாகவும், திருக்குறளை இந்துத்துவம் சார்ந்ததாகவும் பலர் நினைப்பதற்கு பார்ப்பனரான பரிமேலழகர் எழுதிய திருக்குறளுக்கான விளக்க உரையும் ஒரு முக்கிய காரணமாகும்.
குறள்களுக்கு தவறான பார்ப்பனிய விளக்கம் கொடுத்து திருக்குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் திரித்து விட்டார் என்பதுதான் உண்மை.
ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.
பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாம் 1 சூத்திரம் 31 - பகவத் கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)
நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான். (குறள் 972)
ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப்பட்ட பசுவின் இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).
இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.
இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார்.
இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். இத்தகைய பார்ப்பனர்களை வள்ளுவர் இவ்வாறு கடிந்து கொள்கிறார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (குறள் 280)
உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர், பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துகளை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஒருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது.
தனி மனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப்பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619)
இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது.
திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் பூட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது.
இதோ அந்தக் குறள்
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)
தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.
இளங்கோ (இலண்டன்)
மூலம் : சிந்திக்க உண்மைகள் : http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_23.html
Sathiyanarayanan said...
வள்ளுவர் மட்டுமல்ல திராவிடர்கள் எவரும் இந்துக்கள் அல்லர்
நன்றி: www.tvpravi.blogspot.com
சாணக்யன். said...
முதலில் இளங்கோ எந்த மதத்தினர் என்று தெரிந்து கொள்ளலாமா? அவர் எழுதுவதைக் கண்டால் பிற மதத்தினர் போலத் தோன்றினாலும் அவர் இந்துதான் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே கொள்கைகளுக்கும் மதத்திற்கும் சம்மந்தம் இல்லை.
இரண்டாவது, பகவத் கீதையின் ஒரு சில வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அது கொலை வெறியைப் பரப்புகிறது என்று கூறுகிறவர்களை என்னவென்று சொல்வது?
மகாத்மா காந்தி ஒரு இரவு முழுவதும் இரண்டு கன்னிப் பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார். இது உண்மை. ஆனால் என்ன சூழ்நிலையில், எதற்காக என்று ஆராயும்போதுதன் அதன் பின்னணி விளங்கும்.
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற வள்ளுவரின் குறளை மறந்து போனதற்கு யார் பொறுப்பு?
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது
இந்தக் குறளை இயற்றியவர் யார் என்று தெரிகிறதா? சத்தியமாக அது சாணக்யன் இல்லை என்பது மட்டும் உண்மை.
இனிமேலாவது அரைவேக்காட்டுத்தனமாக, பகவத் கீதையை அரை குறையாகப் படித்து விட்டு தேவையில்லாமல் பேச வேண்டாம்.
அடுத்தது சத்திய நாராயணன் அவர்களுக்கு,
முதலில் திராவிடன் யார் என்பதைத் தெளிவாக்குங்கள். நீங்கள் சொல்லும் திராவிடன் என்ற சொல்லுக்கு தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் எல்லாரையும் உள்ளடக்கிய தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது அர்த்தம். ஆனால் இப்போது மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதில்லையே? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை கேள்விப்பட்டதுண்டா? திராவிடர்கள் யாரும் இந்துக்கள் இல்லையென்றால், தைரியமாக இந்து மதத்தை விட்டு விட்டு உங்களுக்குப் பிடித்த, மனிதர்களிடையே வேற்றுமை காட்டாத ஒரு மதத்தில் சேர்ந்து விட்டு, இந்து மதத்தில் பிறந்ததால் கிடைத்த சலுகைகள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறத் தயாரா?
இந்து மதத்தில் உள்ள சாதியை (பிரிவினை, வேற்றுமை என்பது எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் உள்ளது. இது பற்றி வேறு சமயத்தில் சிந்திப்போம், சந்திப்போம்) குறை கூறும் நீங்கள், அதனால் கிடைக்கின்ற சலுகைகளை உதறத் தயாரா?
சாணக்யன்.
Thursday, January 24, 2008
No comments:
Post a Comment