Friday, July 5, 2013

காதலா....காதலா

நான் டெல்லிக்கு முதன்முதல்ல போனப்ப எனக்கு 19 வயசுதான்...வீட்டிலே லூட்டி தாள முடியலேன்னு ஸ்கூல்ல சேக்கும்போது வயசுலே ஒண்ணு சேத்து பொய் வயசு சேத்து விட்டதால், கடைசி வருடம் முடிக்கும் வரை தயவு செய்து 6 மாதம் அவகாசம் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முகம்/பெயர் தெரியாத ஸ்டாஃப் ஸெலக்ஷன் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டு ப்ளானிங் கமிஷனால் எடுத்துக்கொள்ளப்பட்ட அண்டர் ஸெக்ரட்டரியிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக காலேஜ் முடிந்த அடுத்த நாளே ஜி டி எக்ஸ்பிரஸில் ஏற்றி விடப்பட்டு ஒரு ஏப்ரல் மாத முடிவில், வெய்யில் கொளுத்த ஆரம்பித்த நாட்களில் காலை 1130 மணிக்கு வழக்கமான தாமதத்துடன் இறங்கியபோது என்னை வரவேற்கக் காத்திருந்தது -- குமாரும், வெற்றியும்...

என்னோட ஒண்ணுவிட்ட அண்ணாவோட ரெண்டாவது மச்சினனோட கூட வேலை செய்யறவனோட மச்சினி டெல்லியேலே வேலை செய்யறாளாம் -- அவளோட கூட வேலை பாக்கறவன்தான் இந்தக் குமார், அவனோட ரூம் மேட்தான் வெற்றி...

ஏற்கனவே என்னோட ஒரு போட்டோவை அனுப்பி வெச்சிருந்ததால் அவன் ஏதோ செக் போஸ்டிலே தீவிரவாதியைத் தேடற போலீஸ் மாதிரி அவன் கையிலே போட்டோவை வெச்சிண்டு என்னைத் தேடிண்டி நடந்து வந்துண்டிருந்தான்.

என்னோட டிக்கெட் ஆர் ஏ ஸி யா இருந்ததாலே கோச்/பெர்த் நம்பர் அவனுக்குத் தெரியப்படுத்த முடியலே... நான் கிளம்பினது வெள்ளிக் கிழமை ராத்திரி...ஸோ, நோ ஆஃபீஸ்... நோ ஃபோன்...

குமார் என்னவோ ஜாலியாத்தான் என்னை வாங்கன்னான்... ஆனா கூட வந்த வெற்றிதான் என்னவோ நான் அவன் டாவடிச்ச ஃபிகரை நான் தட்டிட்டுப் போனா மாதிரி வெளிப்படையா உர்ருனு இருந்தான்...

நான் கையிலே ஒரு பையும் இந்தக் கையிலே ஒரு வெயிட்டான் ஸூட்கேஸும் வச்சுண்டிருந்தேன்... படுபாவிங்க ஒரு வார்த்தைக்குக்கூட நான் எடுத்துக்கட்டான்னு கேக்கலே...கொஞ்ச தூரம் நடந்து போயிண்டிருக்கும்போது, அவன் கூட வொர்க் பண்ற ரெண்டு பேர் அதே வண்டியிலே வந்து இறங்கியிருக்கா...உடனே இவன் போய் அவங்க கையிலிருந்து ரெண்டு ஸூட்கேஸையும் வாங்கிண்டு தூக்க முடியாம தூக்கிண்டு நடக்கிறான்...ஆமாமாம்,, நீங்க நினச்சது சரிதான்... அந்த ரெண்டு பேரும் ஆணல்ல...

வெளியே போனதும், அந்த ரெண்டு பேரையும் கூட்டிண்டு போக ரெண்டு எமகிங்கரன் மாதிரி அவாளோட ஃப்ரெண்டுகள்...இவனும் இளிச்சுண்டே அவாளுக்கு பை சொல்லிட்டு வந்தான்...

நான் ஒரு ஆட்டோவாவது கூப்பிடுவான்னு நினைச்சேன்,, படுபாவி ஒரு சைக்கிள் ரிக்ஷாவைத்தான் கூப்பிட்டான்... மூணு பேரு, அந்த சின்ன ரிக்ஷாவிலே...கஷ்டம்...

அதுக்கப்புறம் வெற்றி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டானதோ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குமாரைக் கலாய்ச்சதோ அதெல்லாம் பெரிய கதை...

அப்பவே குமாருக்கு 35 வயசு... நான் போன ரெண்டு மாசத்திலே அவன் பாண்டிச்சேரிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு போயிட்டான்...அதுக்கப்புறம் நான் அவனை பல வருஷமா பாக்கலே...

அதுக்கப்புறம் நான் தமிழ்நாட்டிலே வேற ஊரிலே வேலைக்குச் சேந்ததும், காதல், கல்யாணம் எல்லாம் தனிக் கதை...

அப்போ என் மனைவி பிரசவத்துக்காக மெட்ராஸிலே லீவிலே இருந்த நேரம்...நானும் வார இறுதியில் மெட்ராஸுக்கு வந்தவன் பஸ் ஸ்டாண்டிலே காத்திருந்த போது குமாரை மறுபடியும் பார்த்தேன்...அதே முன் வழுக்கை...அதே தாடி...

"டேய் குமார்?"

"டேய் நீயா?, இங்கே என்னடா பண்றே?"

"எங்க வீட்டுக்குப் போறேண்டா, நீ?"

"நான் திருவான்மியூரிலேந்து இங்கே வந்துட்டேண்டா...நானும் அப்பாவும் இப்போ இங்கேதான்,...தம்பி கிருஷ்ணா இப்போ பெங்களூரிலே, சரிடா நீ ஆத்துக்கு வாயேன்"

"இல்லேடா குமார், அவளுக்கு இது டெலிவரி டயம், நான் கூட இருக்கணும்னுதான் லீவு போட்டுட்டு வந்துருக்கேன், சீக்கிரம் போகணும்டா"

"என்னது டெலிவர் டயமா? உனக்குக் கல்யாணம் ஆகிடுத்தா?"

"டேய் முட்டாள் குமார், கல்யாணம் ஆனாதான் வைஃப், அப்புறம்தான் டெலிவரி எல்லாம்" என்றேன்.

"என்னோட வயசுலே பாதிதாண்டா உனக்கு, ஆனா நீ அப்பாவாகப் போறே, நான் இன்னும் ஹஸ்பண்டாவே ஆகலேடா"

"என்னடா குமார் சொல்றே? இன்னுமா ஆகலே?"

"ஆமாண்டா, ஹிண்டுலே குடுத்துப் பாத்தாச்சு, 74 ஜாதகம் வந்தது...அதுலே 8 எனக்குப் பிடிக்கலே...6 இடத்திலே அவாளுக்கு என்னப் பிடிக்கலே... 12லே நான் போகறதுக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுத்து..."

நான் உடனே கணக்கு போட்டு "மீதி 48 என்னடா ஆச்சு?"

"அந்த ஜாதகமெல்லாம் பொருந்தலேடா"

"ஏண்டா 48 ஜாதகமுமா பொருந்தலே? எவண்டா ஜாதகம் பாத்தது?"

"டேய், சும்மா இருடா, எங்கப்பாதாண்டா ஜாதகம் பார்த்தார். நான் ஜாதகத்தை மாத்தலாம்னு இருக்கேன்"

"போடா ஃபூல், ஜாதகத்தை மாத்தாதே, குமார், உங்கப்பனை மாத்து"

இது நடந்து சுமார் 5 வருஷம் கழித்து மறுபடியும் ஒரு ஆச்சரியமான சந்திப்பு...போனில் ஒரு குரல்..எங்கேயோ கேட்ட குரல்...உடனே நான் கேட்டேன் இந்தக் குரலுக்கு ஒரு தாடியிருக்கான்னு... அந்த முனையில் ஆச்சரியம்...அப்புறம் நானே சொன்னேன் டேய் குமார், நாந்தாண்டான்னு...

அன்னிக்கு மத்தியானம் வீட்டுக்கு வந்தான்...இன்னும் பாண்டிச்சேரி தூர்தர்ஷனில்தான் வேலையாம்... ரூம் எடுத்து தங்கியிருக்கானாம்...சொந்த சமையல்...

எனக்கு சங்கடமாயிருந்தது....அப்போதான் என் பையன் ஸ்கூல்லேந்து வந்தான்...ஆனா இவன்... இன்னும்....

இந்தக் காலத்திலே பெற்றவர்களின் சுயநலம் பிள்ளைகளை ரொம்பவும் பாதிக்கிறது...அப்பா மட்டும்தான் குமாருக்கு....அம்மா இல்லை...தம்பியோ ஒரு தறுதலை...அதனால ஒரு மருமக வந்துட்டா அவள் நம்மளை கூட வச்சுக்கலன்னா என்ன ஆகிறதுன்னு யோசிச்சு இவன் கல்யாணத்துக்கு ஏதாவது ஒரு தடை போட்டுண்டே வந்து இப்போ அவனுக்கு 40க்கு மேலே இருக்கும்...அப்பாவோட சுயநலம் இவனோட வாழ்க்கையையே பாழடிச்சிருச்சே...

தனியா ரூமிலே தங்கிண்டு...தானே சமைச்சிண்டு...கஷ்டம்டா சாமி...

சரி ஒரு நாளாவது நல்லா சாப்பிடட்டுமேன்னு "குமார், இன்னிக்கு ராத்திரி நம்மாத்துலேயே சாப்பிடலாமே"

"ஸாரிடா, இன்னொரு நாள் வரேன்... இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லையா, நா இன்னிக்கு சீக்கிரமே கிளம்பி, மெட்ராஸ் போய், அவளையும் அழைச்சிண்டு, குழந்தையை அவா அண்ணாவாத்திலேந்து கூட்டிண்டு வரணும்.. நான் இன்னொரு நாளைக்கு சாவகாசமா வரேனே"

அப்போ நிஜமாகவே ஜாதகம் பொருந்தாமத்தான் கல்யாணம் தட்டிப் போயிடுத்தோ? நான் என்ன அசட்டுத்தனமா அவனோட அப்பாவைத் தப்பா நினைச்சிண்டிருந்தேன்...என்ன ஒரு முட்டாள் நான்..

இப்போது நான் அந்த அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டேன் "குமார், உனக்குக் கல்யாணமாயிடுத்தா?"

 கண்ணடித்தபடியே சொன்னான் "நீ சொன்னதுதாண்டா கரெக்ட்...அப்பாவை மாத்திட்டேன்...ஜாதகத்தை இல்ல... இது ஒரு மாதிரி அரேன்ஜ்ட் லவ் மாரேஜ்

No comments: