அதனால நானும் ரொம்ப சுருக்கியிருக்கேன்...ஸோ இதப் படிக்க உங்களுக்கு டூ மினிட்ஸ்தான் ஆகும்...
நல்ல கொளுத்தற
வெய்யில்லே ஹெல்மெட் இல்லாம, வேர்த்தி வழிய பைக்கிலே சிக்னல்லே நிந்துண்டிருந்தேன்...அது வேற 118...117..116ன்னு சோதனையாயிருந்தது...
திடீர்னு என்னோட
பைக் ஆடினா மாதிரி இருந்தது...சுதாரிச்சு திரும்பிப் பார்த்தா யாரோ ஒரு
பெண்...வெள்ளை சுடிதார்....பல வண்ண பச்சை நிற துப்பட்டாவால தலையை
மூடியபடி...எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலே...
அவளே பேசினா
"தயவு செஞ்சு திரும்பிப் பாக்காதீங்க... இன்னும் 48 செகண்ட்
இருக்கு...உடனே வண்டியக் கிளப்புங்க... நான் எல்லாம் அப்புறம்
சொல்றேன்...ப்ளீஈஈஈஈஸ்"
நானும்
ஈஈஈஈஈஸினேன்...
ஒரு பத்து
நிமிஷம் ஏதும் பேசாமல் வண்டி ஓட்டினேன்...ச்சே...இந்த நேரம் பாத்து ரியர் வ்யூ
மிரர் எசகேடா திரும்பி இருந்தது...அவள் எப்படி இருப்பாள்னு கூடத் தெரியாமல் நானும்
அவளைப் பின்னால் வைத்து....
திடீரென்று
தோளைத் தொட்டாள்...."இங்கே நிறுத்த முடியுமா?" மறுபடியும் ப்ளீஸ்....
உடனே வண்டியை
ஓரங்கட்டினேன்....
இறங்கியவள்
முகத்தை மூடிய துப்பட்டாவை நீக்கி என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே
"தேங்க்ஸ் ய மில்லியன்"...அவ்வளவுதான்....நான் பாத்துண்டிருக்கும்போதே
காற்றிலே மிதந்து சென்று விட்டாள்
அவள் என்னைக்
கடந்து செல்லும்போது அவள் போட்டிருந்த பெர்ஃப்யூம் என்னைக் கடந்து செல்லும்போது
அண்ணாசாலையை ஒரு நிமிடம் சொர்கமாக்கியது...
என்னையே நான்
நொந்து கொண்டேன்...அவள் பேர் கூடக் கேட்கவில்லையே...எப்படி நான் கனவிலே டூயட்
பாடுவது...குடும்பம் நடத்துவது....ஹூம்...எனக்குக் கனவில் கூட அவள் கொடுத்து
வைக்கவில்லை....
இது நடந்து ஒரு வாரம் இருக்கும்...ஹிக்கின்பாதம்ஸில் வழக்கம்போல பிக்சர் போஸ்ட்கார்டுகள் வாங்கிக்கொண்டிருந்தேன்... அப்போது கவுண்டரில் ஏதோ சலசலப்பு கேட்க திரும்பினேன்...மை காட்...இதென்ன கனவா? அன்று என்னுடன் வண்டியில் வந்த அதே தேவதை...
அவள் ஏதோ
சங்கடத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் மெதுவாக அருகில் சென்றேன்...ஒரு வித
பதட்டத்துடன் இருந்த அவள் என்னைப் பார்த்ததும் முகத்தில் காற்றாலை மின்சாரத்தில்
கரண்ட் வந்த மாதிரி பரவசம்...
"எக்ஸ்யூஸ் மி, இன்னிக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?"
நான் எதுவும்
பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் தலையாட்டினேன்.
"நான் அவசரத்துலே எங்கப்பாவோட க்ரெடிட்
கார்டை எடுத்துண்டு வந்துட்டேன்...ஒரு ஆயிரத்து நூறு ரூபாய் இருக்குமா
உங்ககிட்டே...வெளியே போய் எடுத்துத் தந்திர்ரேன்"
என்ன எழவுடா இது, புது மாதிரி
ஃப்ராடா...ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி பாத்ததுனால நம்பாம இருக்கவும்
முடியலே...சரி ஆயிரத்து நூறுதானே பாத்துக்கலாம்...
"நோ ப்ராப்ளம்" என்றபடியே என்
டெபிட் கார்டை எடுத்துக் கொடுத்தேன்...
எனக்காகக்
காத்திருந்து வெளியே வந்தாள்.. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் பக்கத்திலிருந்த ஏ
டி எம்மிலிருந்து க்ரெடிட் கார்டில் காஷ் எடுத்துக் கொடுத்தாள்..."எங்க
குடும்பத்துக்கே ஒரே பின் நம்பர்தான்" என்று புன்னகைத்தாள்.
நான் பதில்
பேசுவதற்குள் அவள் அருகில் ஒரு கார் வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டாள்...உடனே கார்
புறப்பட்டது...
இன்னிக்கும்
அவள் பேர் கேட்கவில்லை...ஆனாலும் பேரில்லாவிட்டால் என்ன...கனவில் குடும்பம் நடத்த
பேர் அவசியமா...
மறுபடியும் அடுத்த வாரம் எங்கேயாவது அவள் வருவாளான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்...
கடவுள் ஒரு
மாசத்தில் கண்ணத்திறந்திட்டார்...நான் ஏ டி எம்மில் பணம் எடுக்க கார்டை விட்டவுடன்
என்ன கண்றாவியோ அது கார்டை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு, உங்கள்
ப்ரான்ச்சை அணுகவும் என்று அட்வைஸ் பண்ணியது...இப்போது பணம் இல்லாமல் நான் என்ன
பண்ணுவது?
ஆத்திரத்துடன் மெஷினைக் குத்துவது போல கையை ஓங்கினேன்...அதானே நான் செய்ய முடியும்...நான் ஏதாவது குத்த அது ஏதாவது உடைஞ்சி போயி காமிராவிலே ரெகார்டி ஆகி வீடு தேடி வந்து நஷ்ட ஈடு கேட்டால் நான் என்ன பண்ணுவேன்...
நொந்தபடியே வெளியே வந்தால் அதே தேவதை...
"என்ன ஆச்சு?"
"கார்டை முழுங்கிடுச்சு"
"நோ ப்ராப்ளம், உள்ளே
வாங்க" என் கையைப் பிடித்து உள்ளே இழுத்தபடி பக்கத்திலிருந்து இன்னொரு
மெஷினில் அவள் கார்டை சொருகினாள். "எவ்வளவு வேணும்?"
"அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க"
"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணும்போது? சொல்லுங்க.. எவ்வளவு?"
நான் சும்மா இருப்பதைப் பார்த்ததும் அவளே 25000 எடுத்து என் கையில் திணித்தாள்...என் அக்கவுண்டில் இருப்பதே மொத்தம் 3000தான்...நான் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல பணத்தை எடுத்து என் ஷர்ட் பாக்கெட்டில் வைத்தாள்...
"உங்க அட்ரஸ், மொபைல் நம்பர்
கொடுங்க நான் நாளைக்கே பணத்தைத் திருப்பித் தந்துட்றேன்"
மறுபடியும் அதே
மயக்கும் புன்னகையுடன் "இந்த உலகம் ரொம்ப சின்னது... மறுபடியும் நாம கட்டாயம்
சந்திப்போம்... அப்போ வாங்கிக்கறேன்" என்று சொல்லிவிட்டு சட்டென மறைந்து
விட்டாள்...
என்ன அதிசயம்
இது....அவள் ஃப்ராடோ என்று நான் நினைத்ததை எண்ணி எனக்கே கூசிற்று...
நானும் கொஞ்ச
நாள் தினமும் ஹிக்கின்பாதம்ஸுக்குப் போனேன்... ஆனால் அவளைக் காணவில்லை...25000 ரூபாயைத்
தனியாக ஒரு கவரில் போட்டு பத்திரமாக பைக்குள் வைத்திருந்தேன்..
ஒரு பத்து நாள்
போயிருக்கும்...சுமார் 4 மணியிருக்கும்...ஒரு டீக்கடையோரம் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு
சிகரெட்டைப் பத்த வைத்தேன்...அப்போது என்னருகே அந்தக் கார் வந்து நின்றது...
கண்ணாடியை
இறக்கியபடி அவள்...அதே தேவதை..."ஹாய் எப்படி இருக்கீங்க..."
நான் அவசர
அவசரமாக பையைத் திறந்து...பையையும் கையையும் சேர்த்து இழுத்தாள் காருக்குள்ளே...
நான் எதுவும்
சொல்வதற்குள் கார் கிளம்பியது... ஆஹா வெளியே அடித்த வெய்யிலுக்கு உள்ளே இருந்த ஏ
ஸி யும், மெலிதான கத்ரியும்...நாரதர் இருக்கிறாரா பக்கத்தில் என்று
பார்த்தேன்...
கார் நேராக
காஃபி ஷாப்பிற்குச் சென்றது...
பைக்கை பூட்டினேனா?
உள்ளே
நுழைந்ததும் எனக்கு மனசே சரியில்லை...
அவளே ஆர்டர்
செய்தாள்.. நான் பையைத் திறந்து அந்தக் கவரை எடுத்துக் கொடுத்தேன்..
வாங்கியவள் "ரொம்ப நாளா இந்தக் கவரை
வச்சிண்டு அலயறீங்க போலிருக்கே"
எப்படி என்பது
போலப் பார்த்தேன்.
"அதான் கவர் ரொம்பவும் நசுங்கிப் போயிருக்கே" என்று சிரித்தாள்.
நான் சங்கடமாகச்
சிரித்தேன்...
"சரி, சொல்லுங்க உங்க பேர், என்ன பண்றீங்க..."
நானும்
இண்டர்வியூவில் ஒப்பிப்பது போல மட மட வென்று...
சொல்லி
முடித்ததும் கேட்டாள் "ஆர் யூ மேரீட்?"
இப்படி நேரடியாகக் கேட்டது எனக்கு என்னவோ போலிருந்தது...இல்லை என வேகமாகத் தலையசைத்தேன்..
இப்போது என்
கண்களை நேராகப் பார்த்து அமைதியாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள் "ஆர் யூ
வில்லிங் டூ மேரி மீ?"
நான் ஆடிப்
போயிட்டேன்...அதிர்ச்சியை என் முகம் காட்டிக் கொடுத்து விட்டது.
"நீங்க அதிர்ச்சியடைஞ்சதிலே
ஆச்சரியமில்லே... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது...என்னைப் பத்தி எதுவுமே
தெரியாது..நான் ஒரு அழகான பொண்ணுங்கறதைத் தவிர...என் மேல ஆசையிருக்கலாம்...ஆனால்
அது காதலாக முடியாது இல்லையா?"
"இவ்வளவு ஓப்பனாக யாரும் பேசி நான்
கேட்டதில்லை"
"கரெக்ட் உங்களோட இந்த வெகுளித்தனமும்
உண்மையும்தான் எனக்குப் பிடிச்சது...யூ ஸீ, நான் பணத்திலேயே பிறந்து பணத்திலேயே
குளிக்கற ஜாதி,,, அதனால எனக்குப் பணத்தைப் பார்த்தாலே ஒரு அவெர்ஷன்... அதுக்காக பணமே
வேண்டாங்கலே...ஆனா பணத்தை மதிக்கிற ஒருத்தன் என் ஹஸ்பண்டா...சான்ஸே
இல்லே....அதனாலதான் உங்கள..."
எது மாதிரியுமில்லாமல்
ஒரு மாதிரியாக தலையாட்டி விழித்தேன்...
"என் மேலே ஆசை மட்டுமில்லாமல்
உங்களுக்கு காதலும் வரும் அப்படீன்னா, அடுத்த வாரம் புதன்கிழமை காலை 10 மணிக்கு
கோடம்பாக்கம் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸுக்கு வந்துடுங்க... மறக்காம உங்க சைடிலேந்து ஒரு
விட்னெஸ்...நானும் என் சைடிலேந்து ஒரு விட்னெஸ்"
நான் தந்த கவரை
என்னிடமே திருப்பித் தந்தாள்..."கல்யாண ட்ரெஸ்ஸுக்கு பெண் வீட்டுலதான் பணம்
தரணும் தெரியுமா"
மறுபடியும் ஒரு
ஆட்டோ பிடித்து டீக்கடை போய் சேர்ந்தேன்...நல்ல வேளை வண்டியைப்
பூட்டியிருந்தேன்...அதன் மேல் சாய்ந்திருந்தவர் சாரி சொன்னபடியே நகர வண்டியை
ஸ்டார்ட் செய்தேன்...
ராத்திரி ரூமில்
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மொபைல் கதறியது...யாருடா அது இந்த
நேரத்தில்... ஏதோ ஒரு புது நம்பர்...கடுப்புடன் ஹலோ என்றேன்... மறுமுனையில் என்
தேவதை...
"என் நம்பர் உங்களுக்கு எப்படிங்க
தெரியும்?"
"முட்டாள் காதலா, நீ மொபைலை
டேபிளில் வைத்து விட்டு பையைக் கவரில் தேடிக்கொண்டிருந்தபோது உனக்குத் தெரியாமல்
உன் மொபைலில் இருந்து என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால்"
என் போனில்
சார்ஜ் தீர்ந்து விழும் போது மணி 3...
எப்போடா
புதன்கிழமை வரும் என்று இருந்தது...
என் நண்பனுடன்
கோடம்பாக்கம் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போனேன்... மணி 11 ஆயிற்று....அவள் வரவில்லை....
நில்லுங்க சார்
நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை...ட்ராஃபிக் ஜாம்...அவளே போன் பண்ணி
சொல்லிட்டாள்..ஆச்சு இதோ என் தேவதை காரிலிருந்து இறங்குகிறாள்...
நம்புங்க சார், எங்க கல்யாணம்
நடந்து இன்னியோட 6 மாசம் ஆயிடுச்சு... இப்போல்லாம் எல்லாமே இன்ஸ்டண்ட்தான் சார்...
அது சரி இங்கே
என்ன பண்றேன்னு கேட்கறீங்களா?
டிவோர்ஸ் ஆன்
ம்யூச்சுவல் கன்ஸெண்ட்...எனக்கு இஷ்டமில்லைதான் ஆனாலும் என் தேவதைக்காக எது
வேணாலும் செய்வேன் சார்... அதே அப்போவே சொன்னேனே இப்போல்லாம் எல்லாமே
இன்ஸ்டண்ட்தான் சார்...
ஆனா எனக்கு ஒரு
விஷயம்தான் இன்னிவரைக்கும் புரியவேயில்லை சார்...அன்னிக்கு அவசரமா என் பைக்
பின்னாடி வந்து ஏறினாளே, அது எதுக்காக?
No comments:
Post a Comment