நான் மொதமொதல்லே யானையைப் பாத்தது அஞ்சாப்பு படிக்க சொல்லோ. அப்போ எங்க ஊருக்கு தலைவர் நடிச்ச நல்ல நேரம் படம் வந்திச்சா, அந்த படத்தோட போஸ்டர் ஊரெல்லாம் ஒட்டிருந்திச்சி,
நான் அம்மாகிட்டே என்னிய படத்துக்குக் கூட்டிப்போம்மான்னு சொன்னேன், அம்மாவும் சரின்னுச்சு, ஆனா பாவம் அதால முடியலே, அப்புறம் ஒருநாள் 'இன்றே கடைசி"ன்னு ஒட்டினாங்க, நான் பள்ளிக்கூடம் உட்டு வந்த உடனே அம்மாவைக் கேட்டேன், அம்மாவும் சரிடா கண்ணு, இன்னிக்கு கட்டாயம் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச்சு, ஆனா பாவம், அதுக்கு ரொம்ப வேலை, அதால என்னிய ரெண்டாவது ஆட்டத்துக்குத்தான் கூட்டிட்டுப் போச்சி, எனக்கு நல்லா தூக்கமா வந்திச்சு, மண்ணு தரை சில்லுனு இருந்திச்சா, கூட்டம் வேற இல்லியா, நான் நல்லா தூங்கிட்டேன்,
அம்மாதான் யானை வரும்போதெல்லாம் என்னிய எழுப்பிச்சி. அப்புறம் படம் உட்டு வரசொல்ல அம்மா அந்த கொட்டாயிலே முறுக்கு விக்கறவரக் கேட்டு யானை இருக்க மாதிரி ஒரு போஸ்டர வாங்கி தந்திச்சு.
அதுக்கு அப்புறமா ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு நெசமாவே ஒரு யானை வந்திச்சு, பெரிசா நெத்தில துண்ணூறு வ்ச்சிக்கினு, கழுத்திலே ஒரு பெரிய மணி கூட இருந்திச்சி, அன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு லீவு உட்டுட்டாங்கோ,
ஏன்னா எல்லா பயலுகளும் யானைக்குப் பின்னாடிதான் இருந்தானுவோ, நானுந்தான்
யானை ஊரை சுத்தி வந்திச்சு,எனக்கு யானையை முன்னாடி பாக்க ரொம்ப ஆசையா இருந்திச்சி,
ஆனா முன்னாடி பாக்கப்போனா நான் பின்னாடி நடக்கணம், யானையோ வேகமா நடந்திச்சா, அதனாலே நான் பின்னாடிதான் பாத்தேன். வாலை ஆட்டிக்கிடே இருந்திச்சு,
ஏன்னு தெரியலே.
யானை வரும்போது பல பேர் அதுக்கு வாழைப்பழம், தேங்கான்னு குடுத்தாங்க, எங்க ஊரிலே மாவு மில் வச்சிருந்த செட்டியார் யானைக்கு சூடம் காட்டி, வாழைப்பழமும் தேங்காயும் குடுத்தார்,
அவர் வந்தப்போ யாரோ ஒரு பய யானை வருது டோய்னு கத்தினான், அப்போ செட்டியார் பொறுக்கிப் பயலுவன்னு திட்டிக்கினே யானைக்கு சூடம் காட்டினார்.
யானை நடக்கும்போது எல்லாரும் அது காலடி பட்ட மண்ண எடுத்துக்கினாங்க, நான் எதுக்காகன்னு கேட்டப்போ, யானை காலடி பட்ட மண்ணை எடுத்து அதிலே செடி வச்சா நல்லா வருமுன்னு சொன்னாங்க, நானும் கொஞ்சம் எடுத்து ஒரு காயிதத்திலே கட்டி பையிலே போட்டுக்கினேன், ஊட்டுக்கு போயி அம்மா கிட்டே அதக் குடுத்தேனா, அப்போ அம்மா என்னக் கட்டிக்கினு அழுதுகினே முத்தம் குடுத்துச்சு.
அதுக்கப்புறம் ஒரு வாரத்திலே பெரிய மழையும் காத்தும் வந்திச்சா, நாங்க படுத்துக்கற ப்ளாட்பாரத்திலே தலைக்கு மேலெ இருந்த தார்பாய் பறந்து போயிருச்சு, ஊரெல்லாம் ஒரே தண்ணி, பள்ளிக்கூடத்துக்கு லீவு உட்டுட்டாங்க, எங்களையெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டாங்க, எங்க அம்மாவும் எங்கூட பள்ளிக்கூடத்துக்கு வந்திச்சா, நான் அதுக்கு என்னோட இடத்தைக் காமிச்சேன், அம்மாவுக்கு ஒரே சந்தோசம், எல்லார் கிட்டேயும் இதான் என் புள்ள படிக்கற இஸ்கோலு, இங்கதான் என் புள்ள உக்காந்து படிக்குதுன்னு சொல்லிச்சு,
ஒரு வாரம் மழை நிக்குற வரைக்கும் நாங்க எங்க பள்ளிக்கூடத்திலதான் இருந்தோம், சோறெல்லாம் போட்டாங்க
அப்புறம் எங்க தமிழ் ஆசிரியர் யானையைப்பத்தி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார், நானும் ரொம்ப சந்தோஷமா எழுதினேன், யானை பெரிசா இருக்கும், வாலை ஆட்டிகினே இருக்கும், நெத்திலே துண்ணூறு பூசி இருக்கும், கழுத்திலே பெரிய மணி இருக்கும்னு நெறைய எழுதிக்கினு போனேனா, ஆனா தமிழ் ஐயா ஒத்துக்கலே, அப்புறமா அவர் போர்டுலே எழுதிப்போட்டார்,
யானை காட்டில் வாழும், மரம் முறிக்கும் அப்படீன்னு என்னென்னவோ எழுதிப் போட்டார், அப்பதா எனுக்கு நெனப்பு வந்திச்சு, எங்க தமிழ் ஐயா யானை வந்த அன்னிக்கு ஊரிலேயே இல்லே, அவர் ஏதோ விசேஷத்துக்கு வெளியூர் போயிருந்தார், அதான் அவருக்கு யானையைப்பத்தி ஒண்ணுமே தெரியலே
எனக்கு இதெல்லாம் இன்னும் நல்லா ஞாபகம் இருக்குது. ஆங், யானை காலடி மண்ணு இன்னா ஆச்சுன்னுதானே கேக்கறீங்க,
இருங்க சொல்லாம போமாட்டேன்,
நான் அந்த மண்ணெ ரொம்ப பத்திரமாதான் வச்சிருந்தேன், ஆனா மழை வந்திச்சுன்னு சொன்னேனில்லையா, அப்போ அந்த பொட்டலம் தண்ணிலே கரஞ்சு போச்சு, மழை நின்னப்புறம் நாங்க இருந்த ப்ளாட்பாரத்தை சுத்தி நிறைய செடி மொளச்சிச்சா,
அப்பதான் அம்மா சொல்லிச்சு யானை காலடி மண்ணு கரஞ்சு அதுலேதான் இந்த செடி மொளச்சிதுன்னு,
அதுலெ ஒரு செடிதான் இப்போ நீங்க பாக்கறிங்களே இந்த புளிய மரம், எவ்வளோ பெரிய மரமில்லீங்கோ,
அதுக்கு அடியிலதான், அம்மா செத்ததுக்கு அப்புறம் நான் சம்சா விக்கிறேன்,
நல்லா சூடா இருக்கு சார், ஒண்ணு ரெண்டு ரூபாதான், வாங்கிக்கிறீங்களா?
No comments:
Post a Comment