Sunday, January 27, 2008

ஆண்களுக்கு ஓரிரு வார்த்தை.

இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாகத்தான் உள்ளது. இரவு பகல், வெளிச்சம் இருள், சத்தம் நிசப்தம், மேடு பள்ளம், வெப்பம் குளிர்ச்சி, உயர்வு தாழ்வு, வெற்றி தோல்வி என எல்லாமே இரண்டு வகைப்படும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் உலகம். இவற்றில் எதனையும் நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனேனில் இவை இரண்டும் complementary in nature. வெற்றி என்ற ஒன்று வேண்டுமானால் அது அடுத்தவனின் தோல்வியில்தான் கிடைக்கிறது. உங்களுக்கு இரவானால் அது மற்றொரு பாகத்தில் பகலாகிறது.

அது போலத்தான் எல்லா ஜீவராசிகளிலும் ஆண் பெண் என்று இரண்டாகப் படைத்தான். இவை ஒவ்வொன்றும் ஒரு அரை வட்டம், அதாவது விட்டம் போன்றது. இரண்டு விட்டங்கள் ஒன்று சேர்ந்தால்தான் அது வட்டம் எனும் முழுமையை அடைகிறது. (அதற்காக இரண்டு ஆணும் அல்லது இரண்டு பெண்ணும் ஒன்று சேர்ந்து நாங்கள் ஒரு வட்டம் போடுகிறோம் என்று சொல்லாதீர்கள், அது மகா மட்டம்). அது சேராதபோது அது முழுமை அடைவதில்லை. இரண்டு விட்டங்களிலே எது பெரியது அல்லது எதி சிறியது என்று கூற முடியுமா? இரண்டுமே சரி பாதிதான்.

மனிதனை விடக் கீழானது என்று நாம் கருதுகிறோமே மற்ற விலங்குகள், அவை நம்மை விட அறிவு வாய்ந்தவை. நாம்தான் நமக்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவைக் கொண்டு இந்த உலகத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்த சேவலும் நான் கோழியை விட உயர்ந்தவன் என்று கூறுவதில்லை. எந்த ஆண் மயிலும் நான்தான் அழகானவன் என்று தன் தோகையே விரித்து பெருமை பேசியதில்லை. ஆனால் இயற்கையிலேயே எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம்தான் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆண் சிங்கம், ஆண் யானை, சேவல், ஆண் மயில் என எல்லாவற்றிலும் ஆணினம்தான் அழகு (ஆனால் மனிதனில் மட்டும்தான் இது மாறிவிட்டது என பெண்கள் கத்துவது கேட்கிறது)

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களை மிகவும் கேவலப்படுத்தக் கூடிய ஒன்று வரதட்சணை. எதற்காக இந்த வரதட்சணை? பிள்ளை வீட்டார் சொல்வது:"இத்தனை நாள் இந்தப் பிள்ளையை வளர்த்து படிக்க வைத்து ஒரு வேலையில் அமர்த்தியிருக்கிறோமே, அதற்காக நீங்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்".

இது எப்படித் தெரியுமா இருக்கிறது, ஒரு நாய்க் குட்டியை வளர்த்து, அதற்கு பல வித்தைகளையும் சொல்லிக் கொடுத்து, நல்ல விலைக்கு விற்பது போலிருக்கிறது. ஆனால், நாயை விற்றால் அத்தோடு நாய் வாங்குபனுக்குச் சொந்தம் ஆகி விடுகிறது. ஆனால் மனிதக் குட்டி மட்டும் வாங்கியவனுக்குச் சொந்தமில்லை.

சில்ருக்கு ம்ட்டும் வரதட்சணை வாங்க வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த விதி விலக்குகள் இந்தக் கட்டுரையின் முடிவில் உள்ளது.

சாமிகளா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், கல்யாணம் ஆனவுடன் ஏதொ ஒரு மனஸ்தாபம் உங்களுக்குள் வருகிறது. அப்போது மனைவியை விட்டு விட்டு நீங்கள் மட்டும் வண்டியில் ஏறிப் போகிறீர்கள். அப்போது உங்கள் மனைவி வாசலில் நின்று உங்களைப் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? "அட மானங்கெட்டவனே, நான் மட்டும் வேண்டாம், எங்கப்பன் வாங்கிக் கொடுத்த வண்டி மட்டும் வேண்டுமா?" ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களே, தேவையா இந்த கேவலம்?

ஆண்களின் பதில் என்னவென்றால். "நாங்கள் என்ன செய்வது! எல்லாம் எங்க அம்மாவின் ஆசை. அவர்களின் ஆசைக்கு நாங்கள் தடை போட முடியாது. எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். அவர்களை எதிர்த்து நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்". அட நாதரிப் பசங்களா, நல்ல விலை படியாவிட்டால் உங்கம்மா உங்களிடம் வந்து "மகனே உனக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. ஆகவே, உன்னை அடிமாட்டு விலைக்கு விற்பதை விட, விற்காமல் சும்மாவே வைத்திருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆகவே நீ பிரம்மச்சாரியாகவே இருந்து விடு" என்று சொன்னால் அதுவும் அம்மாவின் ஆசைதானே என்று சரி சொல்லுவீர்களா?

அல்லது அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட்டு ஒரு அதிபயங்கர குரூபிக்குக் கட்டி வைத்தால் ஒப்புக்கொள்வீர்களா?

நிச்சயம் இது இரண்டும் நடக்காது.

ஆகவே அம்மாவின் ஆசை, அவர்கள் பேச்சைத் தட்ட மாட்டேன் என்பதெல்லாம் சும்மா பிலிம். இவனுக்குன் உள்ளுக்குள் ஆசை உண்டு. நோகாமல் நோம்பு கும்பிட நம் ஆளுங்களை விட்டால் வேற யாருண்டு?

பெண்மணிகளே, வரதட்சணை குடுத்து கலியாணம் செய்து கொண்டு போகிறீர்களா? சமயம் கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் கொண்டு வந்த சீர்வரிசை மற்றும் வரதட்சணையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் அவனுக்குள் இருக்கும் வறட்டு கர்வம் அடங்கும். இப்படியெல்லாம் பேசினால் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறானா? அல்லது விவாகரத்து என்று பேசுகிறானா? கவலையே படாதீர்கள், இன்னும் சற்று அதிக வரதட்சணை கொடுத்தால், இன்னும் நல்ல மாடல் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கலாம்.

ஆண்களே, விலைக்கு விற்கும் நாய்களா நீங்கள்? விலங்குகளை விட உயர்ந்தவன் மனிதன். அந்த மனிதர்களிலே உயர்ந்தது ஆணினம் என்று கர்வம் கொண்டு நடக்கிறீர்களே, உங்கள் நிலைமை இதை விடக் கேவலமாகப் போக முடியாதப்பா. ஒரு ஆண் என்பவன் பெண்ணைத் தனது ஆண்மையாலே கட்டிப் போட வேண்டும். (ஆண்மை என்று நான் கூறுவது, பழனி சித்தர் சிட்டுக்குருவி லேகிய சமாசாரம் இல்லை). ஆண்மை என்பது சொல்லிலே, செயலிலே, கம்பீரத்திலே, நடையிலே உள்ளது. வள்ளுவர் "பிறன் மனை நோக்காப் பேராண்மை" என்று கூறுகிறாரே அதுதான் ஆண்மை. படுக்கறையிலே காட்டுவதல்ல ஆண்மை. காசு கொடுத்து வாங்கப் படும் ஆண்மகனிடம் ஆண்மை உள்ளதாக ஒரு பெண் எண்ணுவாளா? ஆரம்பமே அசிங்கமாக இருக்க வேண்டுமா?

உங்கள் மனைவியின் மனதிலே முதலில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை கடைசி வரையில் சந்தோஷமாக இருக்கும்.

சரி, சில பேர் மட்டும் வரதட்சணை வாங்கலாம் என்று சொன்னேனல்லவா! அந்தப் பட்டியல் இப்போது:

கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள், ஜடங்கள், வெக்கங்கெட்டவர்கள், காறித்துப்பினாலும் ரோஷம் வராதவர்கள், தான் மிகவும் கேவலமான பிறவி எந்த உண்மையை உணர்ந்தவர்கள், பொட்டைகள் (பெண்கள் மன்னிக்கவும், இந்த வார்த்தைக்குப் பெண்கள் என்று அர்த்தம் கிடையாது, பொட்டைக் கண் என்றால் ஒன்றுக்கும் உதவாத கண் என்று பொருள்), கையாலாகாதவர்கள் போன்றோர் மட்டும் வரதட்சணை வாங்கலாம்.

சாணக்யன்.

1 comment:

வால்பையன் said...

அமைதி! அமைதி!!

சுத்தத்தை வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்,
வீடு சுத்தமானால் தெரு சுத்தமாகும்,
தெரு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

வால்பையன்