Friday, January 25, 2008

ஆணுக்குப் பெண் சமமா?

ஆண்களுக்குப் பெண் சமமா? ஆணை விடப் பெண் தாழ்ந்தவளா? ஆண்களைப் போலப் பெண்களும் எல்லாத் துறைகளிலும் வித்தியாசமின்றி நுழையலாமா? பெண்களுக்கு அடுப்பறைதான் உலகமா? வேலைக்குப் போகும் பெண்களை விட இல்லத்தரசிகள் தாழ்ந்தவர்களா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு விடையளிக்க முற்பட்டுள்ளேன். நிதானமாக முழுவது படித்து விட்டு பின்பு கருத்தொலி(Feed Back) செய்யவும்.

ஆண்களுக்குப் பெண் என்றும் சமமாக முடியாது. இரு பொருள்கள் சமமில்லை என்றால் அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று அர்த்தமாகாது. சதுரங்கம் ஒரு விளையாட்டு. கால்பந்து ஒரு விளையாட்டு. கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இவற்றுள் எது எதற்குச் சமம்? அல்லது எது எதற்குத் தாழ்ந்தது அல்லது உயர்ந்தது? கூற முடியுமா உங்களால்?

எல்லாம் விளையாட்டுக்கள் தானே?

சரி அடுத்த உதாரணத்திற்குப் போவோம்.

நம்மைப் பொறுத்தவரை சாலையில் போகும் எல்லா மாடுகளும் ஒன்றுதான், அது காளையா அல்லது என்று பசுவா என்று நாம் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. நம் கவலை எல்லாம் அது நம் மேல் முட்டக்கூடாது அல்லது நம் வண்டி அதன் மேல் மோதக் கூடாது.

ஆனால் பசுவும் காளையும் ஒன்றாகுமா? அல்லது ஏதாவது ஒன்று உயர்ந்ததா? பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. வேலை எதுவும் செய்யவில்லை என்பதற்காகப் பசுவைத் தாழ்ந்தது என்றும் கஷ்டப்பட்டு வயலில் வேலை செய்வதால் காளையை உயர்ந்தது என்றும் சொல்லலாமா?
சமத்துவம் என்று சொல்லி, காளையில் பால் கறந்து பசுவை ஏரில் பூட்ட முடியுமா?

ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.

நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?

அல்லது வலது மற்றும் இடது இரண்டுமே எனது மூளைதான் ஆகவே நாளை முதல் நான் உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை எனது இடது பக்க மூளையிலேதான் முடிவு செய்வேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?

ஆண், பெண் இரண்டு பேருமே இரு பக்க மூளைகள் போன்றவர்கள். அவரவர்களுக்குள்ள வேலைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்தாலே போறும்; யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வராது.

இரண்டு பக்க மூளையும் செயல்பட்டால்தான் ஒரு மனிதன் இயங்க முடியும். ஒரு பக்க மூளை பழுது பட்டாலும் அவன் இயங்க முடியாது.

அது போல ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் இந்த உலகில் இயங்க முடியாது. இதுதான் உண்மை. இரண்டும் ஒன்று சேர்ந்தாலே அது முழுமையான இயக்கம். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை எனும்போது உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?

ஒரு ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கும்போதுதான் அவன் தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள தன்னை விட பலத்தில் குறைந்த பெண்ணைத் தன்னை விட தாழ்ந்தவள் என்று கூறுகிறான்.

சாணக்யன் சொல்வது என்னவென்றால், பெண்ணை நீங்கள் தெய்வமாகத் தொழவும் வேண்டாம்; அவளைக் கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். எப்படி அவளுக்கு நீ தேவையோ அதுபோல உங்களுக்கும் அவள் தேவை. வண்டி ஓடுவதற்குச் சக்கரம் தேவையா அல்லது அச்சாணி தேவையா? சக்கரம் பெரியதாக இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லாமல் ஓடாது. அச்சாணி கூர்மையாக இருந்தாலும், சக்கரத்துடன் சேர்ந்தால்தான் அது பயன் தரும்; ஓடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் பிரயோஜனம். தனித்தனியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது.


அடுத்தது பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடலாமா? பெண்களின் முக்கிய வேலை குழந்தைகளை நன்முறையில் வளர்ப்பது. உடனே நான் பெண்களைக் கட்டிப் போடுகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள். குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான காரியமில்லை. அது மட்டுமல்ல, அது மற்றவர்கள் பொறுப்பில் விட அது சாதாரண விஷயமுமில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. அத்தோடல்லாமல், அவர்கள்தான் பெற்றோர்களை நாளை காக்கக் கூடியவர்கள். பாசத்துடன் வளர்ப்பதுதான் முக்கியமே தவிர, பணத்துடன் வளர்ப்பது அல்ல. குடும்ப உறவுகள் குறைபட்டுப் போன மேல் நாடுகளைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா?

வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?

இது போல ஒரு கருத்து பெண்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது. வீட்டில் இருப்பது கேவலம்; வேலைக்குப் போவதுதான் சிறப்பு என்று பல புதுமைப் பெண்கள் நினைக்கிறார்கள். அம்மணிகளே, அப்படி நீங்கள் நினைத்தால், இது நாள் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தது ஆண்கள் மட்டுமே; அப்படியானால் அவர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்தது தவறல்லவே. ஆகவே வேலைக்குப் போகும் பெண்கள்தான் மேலானவர்கள்; இல்லத்தரசிகள் கீழானவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்கும் வேண்டாம். வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.



மீண்டும் சந்திப்போம்.
சாணக்யன்:

2 comments:

வால்பையன் said...

என்னமோ சொல்ல வர்ரிங்க!

//பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. //

மனுசங்க வேலை என்னான்னு சொல்லலையே!

//ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.//

சும்மா குடுத்தா ரெண்டையும் வாங்குவான், நீங்க தான் காசு கேக்கிரிங்க்ளே!

//நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?//

மூளையே இல்லாதவங்களும் இருக்காங்க தெரியுமா?

//வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?//

செஞ்சா எதாவது சாமி குத்தமா சாமி?

//வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?//

இப்பெல்லாம் வேலைக்கு போக சொல்றதே ஆம்பளைங்க தான்!

//வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.//

அதானே புத்திசாலி எப்படி கல்யாணம் பண்ணிக்குவான்

இப்படி வம்புக்கு இழுத்தா தானே என் ப்ளாக்குக்கு நீங்க வருவீங்க

வால்பையன்

Chanakyan said...

வால் பையன் அவர்களே, கவலையே படாதீங்க,
கேப்டன் அடுத்த முதல்வர் ஆனால், வீட்டுக்கு ஒரு பசு தருவதாக வாக்களித்துள்ளார். (அப்பவும் காளை மாடு காசு குடுத்துதான் வாங்கணும், இல்லன்னா ரோட்டிலே சும்மா திரியற காளை நம்முதா நினைச்சிக்கணம்)

புத்திசாலி கல்யாணமே பண்ணிக்க மாட்டானா? அண்ணா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சாண்ணா? (அதைவிட நேரடியவே நீ புத்திசாலியான்னு கேட்டிருக்கலாம்)