Thursday, January 24, 2008

ஈழப் போராட்டம் சர்வதேசக் குற்றமா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவன் நானல்லன்; அமெரிக்காவும் பிரிட்டனும்.

பாலஸ்தீனம் அரபுகளின் தேசம். இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக அரபுகளைக் கொன்று அங்கே யூதர்களைக் குடியமர்த்தினார்கள். துண்டாக்கப்பட்ட தேசம் ரெண்டாக்கப்பட்டது. பாதி அரபிகளுக்கு; பாதி யூதர்களுக்கு.

உரிமையே இல்லாத யூதர்களுக்கு ஒரு நீதி; உரிமை உள்ள தமிழர்களுக்கு ஒரு நீதியா? யூதர்களின் கண்ணில் வெண்ணெய்; தமிழர்களின் கண்ணில் சுண்ணாம்பா?

அமெரிக்காவும் பிரிட்டனும் அரபிகளையும் அணைத்துக் கொண்டன; யூதர்களையும் இழுத்துக் கொண்டன. ஏனென்றால் யூதர்களுக்குப் பெரிய மூளையிருக்கிறது. அரபிகளிடம் பெட்ரோல் இருக்கிறது. பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது?


16.01.2008 குமுதம் இதழில் வாசகரின் கேள்வியும் வைரமுத்துவின் பதிலும்.

சாணக்யன் கூறுகிறார்:

"கவிப் பேரரசு" வைரமுத்து அவர்களே. யூதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? பாலஸ்தீனம் என்ற தேசம் உருவாவதற்கு முன்னர், அங்கு இருந்த தேசம் என்ன? இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கப் பார்த்தால் முடியுமா?

யூதர்கள் யாவருக்கும் தற்போதைய இஸ்ரேல் நாடுதான் பூர்வீகம். காலப் போக்கில் அவர்கள் சொந்த மண்ணை விட்டு பல நாடுகளுக்கும் நாடோடிகளாத் திரியத் தலைப்பட்டனர். எந்த நாட்டிற்குச் சென்றாலும், தங்கள் ஒற்றுமையாலும், புத்தி சாதுர்யத்தாலும் நன்றாக வாழ்ந்தனர்.

அது மட்டுமல்லாமல் இன்னொரு கேள்வியையும் எழுப்பியுள்ளார் "கவிப் பேரரசு". அது "பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது?"

கவிப்பேரரசு அவர்களே! தமிழனிடம் என்ன இல்லை? எல்லா வளங்களும் இருக்கிறது. அறிவிலே யாருக்கும் சற்றும் சளைத்தவனல்ல தமிழன். ஆற்றலிலேயும் யாருக்கும் குறைந்தவனல்லன் தமிழன்.

ஆனால், அவனிடம் இல்லாதது என்ன தெரியுமா? அதுதான் ஒற்றுமை. அத்துடன் பிறர் வாழப் பொறாமை. தன்னினத்தையே காட்டிக் கொடுக்குமளவுக்கு அது வளர்ந்து விட்டது.




No comments: